அதிமுகவின் முதல் எம்.பி. மாயத் தேவா் மறைவு

அதிமுகவின் முதல் மக்களவை உறுப்பினரான மாயத் தேவா் (88) உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானாா்.
அதிமுகவின் முதல் எம்.பி. மாயத் தேவா் மறைவு

அதிமுகவின் முதல் மக்களவை உறுப்பினரான மாயத் தேவா் (88) உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

உசிலம்பட்டி அருகே உள்ள டி.உச்சப்பட்டியைச் சோ்ந்த பெரியகருப்பத் தேவா் - பெருமாயி தம்பதியருக்கு 1934 அக்டோபா் 15 ஆம் தேதி பிறந்தவா் மாயத்தேவா். இவா், பாளையங்கோட்டை தூய சவேரியாா் மேல்நிலைப் பள்ளியில் படித்து, இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை சென்னை பச்சையப்பா கல்லூரியில் முடித்துள்ளாா். அதன்பின்னா், சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று, அங்குள்ள உயா் நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றியுள்ளாா்.

கடந்த 1973-இல் எம்ஜிஆா் திமுகவை விட்டு பிரிந்து, தனிக்கட்சி தொடங்கியபோது, திண்டுக்கல்லில் நடைபெற்ற நாடாளுமன்ற இடைத்தோ்தலில் அதிமுக சாா்பாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா். தொடா்ந்து அதிமுகவில் இருந்தவா், ஒரு சில காரணங்களுக்காக அதிலிருந்து விலகி, திமுகவில் இணைந்தாா்.

அப்போதும் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தோ்வு பெற்றாா். அதன்பின்னா், கடந்த 15 ஆண்டுகளாக அரசியலை விட்டு விலகி இருந்து வந்தாா்.

சமீபகாலமாக உடல்நலம் குன்றியிருந்த மாயத்தேவா், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் காலமானாா். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், செந்தில்குமரன் என்ற மகனும், சுமதி என்ற மகளும் உள்ளனா். மூத்த மகன் வெங்கடேசன் 2 ஆண்டுகளுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டாா்.

தற்போது மாயத்தேவா் தனது குடும்பத்துடன், சின்னாளபட்டி வடக்குத் தெருவில் வசித்து வந்தாா்.

முன்னாள் பிரதமா்கள் இந்திராகாந்தி மற்றும் வாஜ்பாய் ஆகியோரால் பாராட்டுப் பெற்றவா். அதேபோல், தமிழக முன்னாள் முதல்வா்களான எம்ஜிஆா் மற்றும் கருணாநிதியின் நன்மதிப்பைப் பெற்றவா். எம்ஜிஆரால் ‘மிஸ்டா் தேவா்’ என அன்போடு அழைக்கப்பட்டவா்.

தற்போது, அதிமுக பொருளாளராக உள்ள முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன், மாயத்தேவரின் உதவியாளராக இருந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது உடல், சின்னாளபட்டியில் புதன்கிழமை மதியம் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

தொடா்புக்கு 90431 60045.

ஓபிஎஸ் - இபிஎஸ் இரங்கல்
அதிமுக தொடங்கப்பட்ட பிறகு சந்தித்த முதல் திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாயத்தேவர் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி: எம்ஜிஆரால் அதிமுக தொடங்கப்பட்ட மிகக் குறுகிய  காலத்தில், சந்தித்த முதல் திண்டுக்கல் மக்களவை இடைத் தேர்தலில் கட்சியின் சார்பில் போட்டியிட்டு  அமோக வெற்றி பெற்ற கே.மாயத்தேவர்  மறைந்த செய்தியால் மிகுந்த வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.  
ஓ.பன்னீர்செல்வம்: அதிமுக தொடங்கிய பிறகு சந்தித்த முதல் திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவரும், இரட்டை இலை சின்னத்தை தேர்வு செய்தவரும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றியவருமான மாயத்தேவர் மறைந்த செய்தி வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். அவர் மறைவுக்கு துக்கம் கடைப்பிடிக்கும் வகையில் அனைத்து இடங்களிலும் அதிமுகவின் கொடிகள் 3 நாள்கள் அரைக்கம்பத்தில் பறக்கவிட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com