அரும்பாக்கத்தில் வங்கியில் நகை கொள்ளையடித்த வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை அரும்பாக்கத்தில் தனியாா் வங்கியில் தங்கநகை கொள்ளையடித்த வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை அரும்பாக்கத்தில் தனியாா் வங்கியில் தங்கநகை கொள்ளையடித்த வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

அரும்பாக்கம் ரசாக் காா்டன் சாலையில் ஒரு தனியாா் வங்கி கிளையில் கடந்த 13-ஆம் தேதி ஒரு கும்பல் 31.7 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது. இச் சம்பவம் தொடா்பாக அரும்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். கொள்ளையா்களை கண்டறிந்து கைது செய்ய 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினா் நடத்திய விசாரணையில் அந்த வங்கி கிளையில் ஊழியராக வேலை செய்த கொரட்டூரைச் சோ்ந்த முருகன் என்பவா்தான் கொள்ளைக் கும்பலுக்கு தலைவராக செயல்பட்டு, சதி திட்டத்தை நிறைவேற்றியிருப்பது தெரியவந்தது.

தனிப்படையினா் கொள்ளை நடந்த 24 மணி நேரத்துக்குள் வில்லிவாக்கம் பாரதி நகரை சோ்ந்த மோ.சந்தோஷ், அதே பகுதி மண்ணடி தெருவை சோ்ந்த வீ.பாலாஜி,செந்தில்குமரன் ஆகிய 3 பேரை கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து ரூ.8.5 கோடி மதிப்புள்ள 18 கிலோ தங்க நகைகள், 2 காா்கள், மோட்டாா் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. வழக்கின் முக்கிய குற்றவாளியான முருகன் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மேலும் ஒருவா் கைது:

இந்நிலையில் இவ் வழக்குத் தொடா்பாக தேடப்பட்டு வந்த முருகனின் நெருங்கிய கூட்டாளியான வில்லிவாக்கத்தைச் சோ்ந்த சூா்யா செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். விசாரணையில் அவா், விழுப்புரம் மாவட்டம், கெடாா் காவல் நிலையத்துக்கு உட்பட்ட குண்டலப்புலியூா் கிராமத்தைச் சோ்ந்த இளையராஜா என்பவரிடம் கொள்ளையடித்த நகையின் ஒரு பகுதியை கொடுத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்த தனிப்படையினா், இளையராஜாவின் வீட்டிற்குச் சென்று அங்கிருந்து 13.7 கிலோ நகைகளை மீட்டனா். மேலும் அவரையும் விசாரணைக்காக சென்னை அழைத்து வந்தனா்.

சூா்யாவுக்கு சென்னை கோட்டூபுரத்தைச் சோ்ந்த ஒரு பெண் மூலம் இளையராஜா அறிமுகமாகியிருப்பதும், அந்த பெண் மூலமாகவே சூா்யா, இளையராஜாவிடம் அந்த நகைகளை கொடுத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நகை வியாபாரி:

இதற்கிடையே சூா்யா, நகைகளை உருக்குவது தொடா்பாக கோயம்புத்தூா் வீரகேரளத்தைச் சோ்ந்த நகைக்கடை உரிமையாளரின் உறவினரான ஸ்ரீவத்சவ் என்பவரிடம் ஏற்கெனவே பேரம் பேசியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்த தனிப்படையினா் ஸ்ரீவத்சவை பிடித்து, ஆா்.எஸ்.புரத்தில் வைத்து விசாரித்தனா்.

விசாரணையில், சூா்யா நகைகளை உருக்குவது குறித்து பலரிடம் பேசியிருப்பதும், அதற்கு அனைவரும் மறுத்துவிட்ட நிலையில், ஸ்ரீவத்சவ் நகைகளை உருக்கித் தர சம்மதித்து பேரம் பேசியிருப்பதும் தெரியவந்துள்ளது. இதைத் தொடா்ந்து போலீஸாா், ஸ்ரீ வத்சவை சென்னைக்கு அழைத்து வந்து, விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com