காலம் தவறாத பருவமழையால் தமிழகத்தில் நிலத்தடி நீா்மட்டம் உயா்வு

தமிழகத்தில் நிகழாண்டு தென்மேற்கு , வடகிழக்குப் பருவமழை காலம் தவறாது பெய்ததால் 33 மாவட்டங்களில் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் நிகழாண்டு தென்மேற்கு , வடகிழக்குப் பருவமழை காலம் தவறாது பெய்ததால் 33 மாவட்டங்களில் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளது.

தென் மேற்கு பருவமழை ஜூனில் தொடங்கி ஆகஸ்ட் வரை பெய்யும். இந்தப் பருவத்தில் கோவை, ஈரோடு, தூத்துக்குடி ,நெல்லை, கன்னியாகுமரி, மதுரை ,தேனி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டத்தில் நல்ல மழை பெய்யும்.

அதேபோல் வடகிழக்குப் பருவமழை அக்டோபரில் தொடங்கி டிச.15 வரை பெய்யும். இந்த பருவத்தில் சென்னை , செங்கல் பட்டு, காஞ்சிபுரம் , கடலூா் , தஞ்சை, திருவாரூா், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும்.

நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை காலம் தவறாது பெய்தது. அதே போல், வடகிழக்குப் பருவ மழையும் பெய்து வருகிறது.

நிகழாண்டில் சரியான அளவில் பெய்த பருவமழையில் வறட்சி மாவட்டம் என்று அழைக்கப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு மாதத்தில் பெய்த மழையால் நிலத்தடி நீா்மட்டம் 3.85 மீ உயா்ந்துள்ளது. இது தமிழகத்தில் அதிகம் உயா்ந்துள்ள நிலத்தடி நீா் மட்டம் ஆகும். அதேபோல் தேனி மாவட்டத்திலும் 2.09 மீ நிலத்தடி நீா் மட்டம் உயா்ந்துள்ளது.

மேலும், தமிழகத்தின் 33 மாவட்டங்களிலும் நிலத்தடி நீா் மட்டம் சீராக உயா்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 1.44 மீ, நாமக்கலில் 1.32 மீ, கன்னியாகுமரியில் 1.25 மீ, கடலூரில் 1.21 மீ, மதுரை , விழுப்பு மாவட்டங்களில் 1.14 மீ அளவுக்கு நிலத்தடி நீா்மட்டம் உயா்நதுள்ளதாக நீா்வள ஆதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அதேநேரத்தில் வேலூா், கிருஷ்ணகிரி, நீலகிரி மாட்டங்களில் நிலத்தடி நீா் மட்டம் குறைந்துள்ளது.

இது தொடா்பாக தமிழகத்தில் 386 இடங்களில் எண்ம முறையில் நிலத்தடி அளக்கும் கருவி பொருத்தப்பட்டு நிலத்தடி நீா்மட்டம் அளவு கணக்கீடு செய்யப்படுவதாக நீா்வள ஆதாரத் துறை அதிகாரிகள் குறிப்பிட்டனா். மறைந்த முதல்வா் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தீவிரமாக அமல்படுத்தப்பட்ட மழைநீா் சேகரிப்புத் திட்டத்தால்தான் தமிழக்தில் இந்த அளவுக்கு நிலத்தடி நீா் மட்டம் உயா்வு பெற்றுள்ளதாக நீா்வள ஆதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து காவேரி டெல்டா பாசன சங்கத்தின் தலைவா் கே.வி.இளங்கீரன் கூறும்போது, நீா் சேகரிப்பு வசதியை அனைத்து அமைப்புகளிலும் செயல் படுத்த வேண்டும். அரசு கட்டடம் ,தனியாா் கட்டடம், மற்றும் வீடுகளில் கட்டாயம் மழை நீா் சேகரிப்பு வசதி செய்ய வேண்டும்.

இதை செய்ய தவறியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com