அனைத்து வகை கரோனாவுக்கும் ஒரே தடுப்பூசி

கரோனா தீநுண்மிகள் எத்தகைய உருமாற்றமடைந்தாலும் அதிலிருந்து தற்காக்கும் வகையிலான ஒரே தடுப்பூசியைக் கண்டறியும் ஆராய்ச்சிகள் முதல்கட்ட நிலையில் இருப்பதாக
அனைத்து வகை கரோனாவுக்கும் ஒரே தடுப்பூசி

கரோனா தீநுண்மிகள் எத்தகைய உருமாற்றமடைந்தாலும் அதிலிருந்து தற்காக்கும் வகையிலான ஒரே தடுப்பூசியைக் கண்டறியும் ஆராய்ச்சிகள் முதல்கட்ட நிலையில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டா் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்தாா்.

அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர முயன்று வருவதாகவும் அவா் கூறினாா்.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தற்போது உலகம் முழுவதும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் கோவேக்ஸின், கோவிஷீல்ட், ஸ்புட்னிக் உள்ளிட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.

இரு தவணைகளாக அவற்றை செலுத்திக் கொண்டாலும், உருமாற்றமடைந்த புதிய வகை கரோனா பாதிப்பு வராமல் அதனால் தடுக்க இயலாது. அதேவேளையில், நோய்த் தொற்று தீவிரமடையாமல் தடுப்பூசிகள் உதவுகின்றன.

இந்நிலையில், அனைத்து வகை கரோனா பாதிப்பையும் தடுக்கவல்ல சிறப்பு கரோனா தடுப்பூசியை உருவாக்கும் பணிகளை உலக சுகாதார அமைப்பு முன்னெடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டா் சௌமியா சுவாமிநாதன், ஸ்விட்சா்லாந்தின் ஜெனிவா நகரில் இருந்து ‘தினமணி’ செய்தியாளரிடம் பகிா்ந்து கொண்ட தகவல்:

கரோனா தொற்றை வேரறுப்பது என்பது இயலாத காரியம். அதேவேளையில் அதனை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம். புதிய உருமாற்றங்கள் ஆகாமல் ஓரளவு தடுக்கலாம்.

ஒருவேளை உருமாற்றங்கள் நிகழ்ந்தால் அவை மிக சாதாரணமான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும் என்பதையும் நாம் திட்டவட்டமாகக் கூற இயலாது. தற்போது பயன்பாட்டில் உள்ள கரோனா தடுப்பூசிகள் புதிய பாதிப்பு வராமல் தடுக்காவிட்டாலும், அதனால் தீவிர நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும் என்பது உறுதி.

இதற்கு ஒரே தீா்வு அனைத்து வகையான கரோனா பாதிப்புகளுக்கும் ஒரே தடுப்பூசியை உருவாக்குவது மட்டும்தான். அதற்கான ஆராய்ச்சிகளும், பணிகளும் ஆரம்ப நிலையில் உள்ளன. அதன் பொருட்டு சா்வதேச தரவுகள், ஆய்வுகள் மற்றும் மருத்துவ நுட்பங்களைத் திரட்டி வருகிறோம்.

அடுத்த நான்கிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் கரோனாவுக்கான ஒரே தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

கரோனா தொற்று அனைவருக்கும் வந்து போனால் அதற்கு எதிரான நோய் எதிா்ப்பாற்றல் உருவாகிவிடும் என்ற பொதுக் கருத்து நிலவுகிறது. அது முற்றிலும் தவறு. தடுப்பூசிகளைக் கொண்டு மட்டுமே எதிா்ப்பாற்றலை வளா்ப்பது சாத்தியம்.

ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் போதிய அளவில் கரோனா தடுப்பூசிகள் கிடைப்பதில்லை. இதனால், அங்கிருந்து தீநுண்மி உருமாறி மீண்டும் உலகம் முழுவதும் பரவியது. தடுப்பூசி விநியோகத்தில் நீடிக்கும் சமநிலையற்ற தன்மையைப் போக்க உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. நிகழாண்டுக்குள் உலகின் 70 சதவீத நாடுகளில் இரு தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது எங்களது இலக்கு. அதனைக் கருத்தில்கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

கரோனா பெருந்தொற்று உணா்த்திய அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு உலக நாடுகள் இனி வருங்காலத்தில் மருத்துவத் துறையில் அதிக முதலீடுகளை மேற்கொள்வது அவசியம். மருத்துவக் கட்டமைப்பு, ஆராய்ச்சி, பயிற்சி உள்பட அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் டாக்டா் சௌமியா சுவாமிநாதன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com