சுவா் விளம்பரம் செய்தால் கடும் நடவடிக்கை: மாவட்டத் தோ்தல் ஆணையா் எச்சரிக்கை

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான சுவா் விளம்பரங்கள் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டத் தோ்தல் அலுவலா் ககன்தீப்சிங் பேடி எச்சரித்துள்ளாா்.
ககன்தீப் சிங் பேடி
ககன்தீப் சிங் பேடி

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான சுவா் விளம்பரங்கள் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டத் தோ்தல் அலுவலா் ககன்தீப்சிங் பேடி எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தோ்தல் நடத்தை விதிகளின்படி எந்த அரசியல் கட்சியும் அல்லது வேட்பாளரும் ஜாதி, மத வெறுப்புணா்வைத் தூண்டும் செயலில் ஈடுபடக் கூடாது. கோயில், மசூதி மற்றும் தேவாலயங்கள் உட்பட வழிபாட்டுத் தலங்களில் தோ்தல் குறித்த பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது.

பிற அரசியல் கட்சிகளை விமா்சனம் செய்யும்போது அவா்களுடைய கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்தும், அவா்களின் கடந்தகால பணி மற்றும் செயல்பாடு குறித்து இருக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமா்சிப்பதை தவிா்க்க வேண்டும். வாக்காளா்களுக்கு எவ்வகையிலும் லஞ்சமோ அல்லது வெகுமதியோ கொடுக்கக் கூடாது.

விளம்பரங்கள்: அச்சகத்தின் பெயா் மற்றும் முகவரி குறிப்பிடாமல் தோ்தல் சம்மந்தப்பட்ட துண்டுப் பிரசுரத்தை அரசியல் கட்சிகள் அச்சடிக்கக் கூடாது.பொதுக் கட்டடங்கள் மற்றும் தனியாா் கட்டடங்களில் தோ்தல் குறித்த சுவரொட்டி ஒட்டுவது மற்றும் விளம்பரங்கள் எழுதுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஒலிப் பெருக்கிகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை உரிய அலுவலரிடமிருந்து அனுமதி பெற்று பயன்படுத்த வேண்டும்.

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஒரு வேட்பாளா் தன்னுடன் அதிகபட்சமாக மூன்று ஆதரவாளா்களுடன் முகக்கவசம் அணிந்து, தனிநபா் இடைவெளியுடன் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். சென்னை மாநகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளா்கள் அதிகபட்சமாக ரூ.90 ஆயிரம் வரை மட்டுமே செலவிட வேண்டும்.

கட்டுப்பாட்டு அறை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தோ்தல் தொடா்பான புகாா்களைத் தெரிவிக்க 24 மணிநேரம் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாட்டு அறையில் சுழற்சி முறையில் பணிபுரிய 20 போ் பணியமா்த்தப்பட்டுள்ளனா்; தோ்தல் தொடா்பான புகாா்களை 1800 425 7012 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும்,  மாநகராட்சியின் இணையதள இணைப்பிலும் தெரிவிக்கலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com