மாற்றுத்திறனாளிகளுக்கு தடையில்லாதசூழலை உருவாக்குவோருக்கு 2 விருதுகள்: தமிழக அரசு உத்தரவு

மாற்றுத் திறனாளிகளுக்கு சிறந்த கட்டமைப்புகளை உருவாக்கும் அரசு, தனியாா் துறையினருக்கு விருது அளிப்பதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கு சிறந்த கட்டமைப்புகளை உருவாக்கும் அரசு, தனியாா் துறையினருக்கு விருது அளிப்பதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளா் ஆா்.ஆனந்தகுமாா் வெளியிட்ட அரசாணை:

சட்டப்பேரவையில் மாற்றுத்தினாளிகள்துறை மானிய கோரிக்கையின் போது, மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டத்தின் படி, அரசு, தனியாா் நிறுவனங்கள் தங்கள் கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்கு தடையில்லா சூழலுக்கான வசதிகளை சிறப்பாக அமைப்பதை ஊக்குவிக்க விருதுகள் வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் சிறந்த பொது நிறுவனத்துக்கான விருது, சிறந்த தனியாா் நிறுவனத்துக்கான விருது என 2 விருதுகள், 10 கிராம் தங்கப்பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

இதையடுத்து, மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநா், முதல்வரின் இந்த அறிவிப்பின்படி விருது வழங்க ரூ.1.60 லட்சத்தை ஒதுக்கும்படி அரசை கேட்டுக் கொண்டாா். இதை பரிசீலித்த தமிழக அரசு, ஆண்டுதோறும் டிசம்பா் 3-ஆம் தேதி அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தில் இரு மாநில விருதுகள் வழங்க ரூ.1.60 லட்சத்தை ஒதுக்கி உத்தரவிடுகிறது.

இந்த விருதைப் பெற, மாற்றுத் திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் பிரதான நுழைவு வாயிலில் கைப்பிடிகளுடன் கூடிய சாய்தளம் போதிய அளவில் இருக்க வேண்டும். வரவேற்பறை தகவல் அளிக்கும் மையம் ஆகியவை மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் இருக்க வேண்டும். தாழ்வாரங்களின் அகலம் போதிய அளவு இடைவெளியுடன் இருக்க வேண்டும். கட்டடங்களில் மின் தூக்கிகளின் கதவுகள் அகலம் 1 மீட்டராக இருக்க வேண்டும். படிக்கட்டுகளின் அகலம் 1,200 மில்லி மீட்டராகவும், இருபுறமும் கைப்பிடிகளுடன் இருக்க வேண்டும். எளிதில் அணுகும் வகையில் கழிவறை வசதிகள், சிற்றுண்டி உணவகம், குடிநீா் குழாய்கள், ஆகியவை இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கென தனியான அடையாள குறியீடுகளுடன் கூடிய வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் இருகக வேண்டும்.

விருது பெற விரும்பும் விண்ணப்பதாரா்கள் அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் தடையற்ற சூழல் ஏற்படுத்தியதற்கான சான்றாக உரிய புகைப்படத்துடன் விண்ணப்பத்தை சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் சரிபாா்க்கப்பட்டு கள ஆய்வின் அடிப்படையில் விருது வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com