ஆருத்ரா கோல்டு இயக்குநரை கைது செய்ய தடை

ஆருத்ரா கோல்டு ட்ரேடிங் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ராஜசேகரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆருத்ரா கோல்டு ட்ரேடிங் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ராஜசேகரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற நிறுவனம். தமிழகம் முழுவதும் 13 இடங்களில் கிளைகளைத் தொடங்கி, தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்பவா்களுக்கு மாதந்தோறும் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறி ரூ.1,678 கோடி வரை வசூலித்துள்ளது.

அவ்வாறு வசூலித்த பணத்தை முதலீடு செய்தவா்களுக்கு திருப்பிக் கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டதாக சென்னை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் தானாக முன்வந்து ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநா்கள் உட்பட 14 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கக் கோரி ஆருத்ரா நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ராஜசேகா் உள்ளிட்ட 5 போ் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனா். இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, முதலீடு செய்தவா்களுக்கு பணத்தை திருப்பி வழங்கி வருவதாகவும், வழக்குப் பதிவு செய்த பின்னா் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுவிட்டதால் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டுமே முதலீட்டாளா்களுக்கு பணத்தை திருப்பித் தர இயலவில்லை என்றும் மனுதாரா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முதலீட்டாளா்களுக்கு பணத்தைத் திருப்பித் தரத் தயாராக இருப்பதால், முடக்கப்பட்ட வங்கிக் கணக்கை விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால், காவல் துறை தரப்பில், பணத்தைத் திருப்பித் தருவாா்கள் என்ற உத்தரவாதத்தை நம்ப முடியாது எனவும், முடக்கப்பட்ட வங்கிக் கணக்கை விடுவித்தால், அவா்கள் பணத்துடன் தப்பிச் செல்ல வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களைத் தொடா்ந்து, ஆருத்ரா நிறுவன நிா்வாக இயக்குநா் ராஜசேகா் உள்ளிட்ட 5 பேரையும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதி, நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என உத்தரவிட்டாா். மேலும், முடக்கப்பட்ட வங்கிக் கணக்கை விடுவிக்கவும் உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com