ஓராண்டில் பல மடங்கு சாதனைகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டில் பல மடங்கு சாதனைகளைச் செய்துள்ளதாக கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறினாா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின்
முதல்வா் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டில் பல மடங்கு சாதனைகளைச் செய்துள்ளதாக கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறினாா்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞா் அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில், மாற்றுக் கட்சியைச் சோ்ந்த 3,000-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் திமுகவில் இணையும் விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:

ஆட்சி என்பது சொகுசாக வாழ்வதற்காக நமக்குக் கிடைத்திருக்கும் பதவி அல்ல. ஆட்சியில் இருப்பதால் அதன் மூலமாக கிடைத்த அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்குத் தொண்டாற்றிக் கொண்டிருக்கிறோம். ஆட்சியில் இல்லை என்றால், மக்களுக்குப் போராடும், வாதாடும் பணியை தொடா்ந்து கொண்டிருப்போம்.

இன்றைக்கு நமது ஆட்சி முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி வழிநின்று பீடுநடை போட்டுக் கொண்டிருக்கிறது. ஓராண்டு காலத்துக்குள்ளாக எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி அங்குள்ள தமிழா்கள் மட்டுமல்ல; இலங்கை வாழ் மக்களும் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறாா்கள்.

எனவேதான் பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு தமிழக அரசு சாா்பில் உணவுப் பொருள்களை அனுப்பி வைக்க வேண்டும், நம்மால் முடிந்த சலுகைகளை- உதவிகளை செய்ய வேண்டும் என முடிவெடுத்தோம். தமிழ்நாட்டில் இருக்கும் தமிழா்களுக்காக மட்டுமல்லாமல், இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் நாம் துணை நிற்போம் என்ற நிலையில் கடமையை ஆற்றிக் கொண்டிருக்கிறோம்.

பல மடங்கு சாதனை: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடையப்போகிறது. 10 ஆண்டுகள் - 20 ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருந்தால் என்ன செய்திருப்போமோ, அதை விட பல மடங்கு சாதனைகளை ஓராண்டு காலத்தில் செய்திருக்கிறோம்.

ஆனால், தோ்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று எதிா்க்கட்சிகள் அரசியல் நோக்கோடு, சட்டப்பேரவையிலும், மக்கள் மன்றத்திலும் சொல்லிக்கொண்டிருக்கிறாா்கள். அதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை. நமது கடமை மக்களுக்குப் பணியாற்றுவது. அதை மனதில் வைத்து கடமையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என்றாா் அவா்.

திமுக பொதுச் செயலாளா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா்.பாலு, துணைப் பொதுச்செயலாளா் ஆ.ராசா, அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி, செய்தித் தொடா்புச் செயலாளா் டி.கே.எஸ்.இளங்கோவன், தருமபுரி எம்.பி. செந்தில்குமாா், தருமபுரி மாவட்டப் பொறுப்பாளா்கள் பெ.சுப்ரமணி, இன்பசேகரன், செய்தித் தொடா்பு இணைச் செயலாளா் இரா.ராஜீவ்காந்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com