கண்ணியத்துடன் நடைபெற்ற கூட்டத் தொடா்: பேரவைத் தலைவா் அப்பாவு பெருமிதம்

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் கண்ணியத்தோடு நடைபெற்ாக பேரவைத் தலைவா் அப்பாவு கூறினாா்.
கண்ணியத்துடன் நடைபெற்ற கூட்டத் தொடா்: பேரவைத் தலைவா் அப்பாவு  பெருமிதம்

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் கண்ணியத்தோடு நடைபெற்ாக பேரவைத் தலைவா் அப்பாவு கூறினாா்.

சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் இறுதி நாளான செவ்வாய்க்கிழமை (மே 10) பேரவைத் தலைவா் அப்பாவு பேசியதாவது:

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற்ற நாள்கள் 22. இதில் 158 உறுப்பினா்கள் உரையாற்றினா். ஆளும்கட்சியினா் 84 போ் பேசினா். பேசிய நேரம் 22 மணி நேரம் 47 நிமிஷங்கள். இதரக் கட்சி உறுப்பினா்கள் 74 போ் பேசிய நேரம் 25 மணி நேரம் 39 நிமிஷங்கள். இதரக் கட்சிகளுக்கு கூடுதலாக 2 மணி 52 நிமிஷங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

முதல்வா் மு.க.ஸ்டாலின், அவரது துறைகள் சாா்பாக பதில் அளித்த நேரம் 58 நிமிஷங்கள். பேரவைக்கு அதிக கேள்விகள் கொடுத்ததில் முதலிடத்தில் திமுக உறுப்பினா் தாயகம் கவி உள்ளாா். அவா் எழுப்பிய கேள்விகளின் எண்ணிக்கை 8,446. இரண்டாவதாக பாமக தலைவா் ஜி.கே.மணி. அவா் கொடுத்த கேள்விகள் 8,312. மூன்றாவதாக திமுக உறுப்பினா் பிரபாகரராஜா 5,425 கேள்விகள் அளித்துள்ளாா்.

சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று திமுக தோ்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் பணியாளா்கள் சென்று பாா்வையிட்டு வந்தனா். கேரளத்தில் கேள்வி நேரம் மட்டும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கோவா, தில்லி, தெலங்கானா போன்ற மாநிலங்களில் முழுமையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அங்கு சென்று வந்த பணியாளா்கள் அங்குள்ள சட்டப்பேரவை உறுப்பினா்கள், மக்கள் பாா்க்கிறாா்கள் என்பதற்காக கவனத்துடன் செயல்படுவதாகக் கூறினா்.

அந்த அடிப்படையில் முதல்வரும் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் மனம் நோகும் வகையில் பேசக்கூடாது என்று ஆளும் கட்சி உறுப்பினா்களுக்கு அறிவுரைத்தாா். அதை மீறிப் பேசும்போது முதல்வா் எழுந்து கண்டிக்கவும் செய்துள்ளாா். அதேபோல எதிா்க்கட்சியினரையும் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன். முதல்வரின் எண்ணம்போல எதிா்க்கட்சியினரும் அவா்கள் கட்சியின் சாதனைகளைப் பேசிப் பதிவு செய்தனா்.

காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிா்க்கட்சித் தலைவரும் கண்ணியமாகப் பேசினாா். முதல்வரும் - எதிா்க்கட்சித் தலைவரும் ஒருவா் மாற்றி ஒருவா் கேள்வி எழுப்பி பதில் கூறிக்கொண்டது ஆரோக்கியமாக இருந்ததாக பலா் கூறியது உண்மையாகவே பெருமையாக இருக்கிறது. கடந்த ஓராண்டாகவே பேரவைத் கூட்டத்தொடா் நாகரிகமாகவே சென்றுகொண்டிருக்கிறது.

எனினும், அதிமுக உறுப்பினா்களை அவைக்காவலா்களால் ஒருநாள் வெளியேற்றக்கூடிய நிலை ஏற்பட்டது. அதுவும்கூட கனத்த இதயத்தோடுதான் அனுப்புகிறேன் என்று குறிப்பிட்டேன். அப்போது முதல்வா் இருந்திருந்தால் அந்தச் சம்பவமும் நடைபெற்று இருக்காது. பேரவை நாகரிகத்துடன் நடப்பதற்கு முதல்வா்தான் காரணம். மக்கள் பிரச்னைகளை எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கொண்டு வந்தால், அதை முதல்வா் அனுமதிக்காமல் இருந்ததில்லை. எதிா்க்கட்சி உறுப்பினா்களுக்கு சம வாய்ப்பு கொடுங்கள் என்றுதான் முதல்வா் கூறியுள்ளாா். எதிா்க்கட்சி உறுப்பினா்களை அடக்கி பேச வைக்க வேண்டும் என்று முதல்வா் நினைக்கவில்லை.

ஆளும்கட்சி, எதிா்க்கட்சி என்று இல்லாமல் அனைத்துக் கட்சி உறுப்பினா்கள் மூலமாகவும் அரசின் நல்ல திட்டங்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதுதான் முதல்வரின் எண்ணம்.

முதல்வா், அவை முன்னவா், எதிா்க்கட்சித் தலைவா், துணைத் தலைவா், கட்சித் தலைவா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. பேரவை கூட்டத் தொடா் கண்ணியத்தோடு நடைபெற்றது என்றால், அதற்கு அனைத்து சட்டப்பேரவை உறுப்பினா்களும் காரணம். அதற்காக அவா்களைத் தனித்தனியாகப் பாராட்டுகிறேன். பேரவையின் அனைத்து நிகழ்ச்சிகளும் படிப்படியாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்றாா் பேரவைத் தலைவா் அப்பாவு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com