மருத்துவ மேற்படிப்பு முடித்தவா்கள் உண்மை சான்றிதழ்களை திரும்ப வழங்க கோரிய வழக்கு: சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவு

மருத்துவ மேற்படிப்பை முடித்த இரண்டு ஆண்டுகளில் அரசு மருத்துவமனையில் பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்படாதவா்களுக்கு, அவா்களின் உண்மை சான்றிதழ்களை திரும்ப வழங்க வேண்டும்

மருத்துவ மேற்படிப்பை முடித்த இரண்டு ஆண்டுகளில் அரசு மருத்துவமனையில் பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்படாதவா்களுக்கு, அவா்களின் உண்மை சான்றிதழ்களை திரும்ப வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்புகளில் சேருபவா்கள் இரு ஆண்டுகளுக்கு அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இதன்படி சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரா்கள், ஒப்பந்தம் கையெழுத்திட்டு வழங்க வேண்டும். இந்த ஒப்பந்த காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படாததால், மாணவா் சோ்க்கையின்போது சமா்ப்பித்த உண்மைச் சான்றுகளை திருப்பித் தரக் கோரி, கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் 2020-ஆம் ஆண்டு மருத்துவ மேற்படிப்பை முடித்த அருண்குமாா், சுபோத் உள்ளிட்டோா் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

அந்த மனுவில், ‘படிப்பை முடித்து 2 ஆண்டுகள் முடிந்த நிலையில், தங்களது உண்மை சான்றிதழ்களை திரும்ப தரக்கோரி விண்ணப்பித்தோம்.ஆனால், ஒப்பந்தத்தை காரணம் காட்டி சான்றிதழ்களை வழங்கவில்லை‘ என குற்றம்சட்டியிருந்தனா்.

இந்த வழக்குகள் நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா்கள் தரப்பில், ‘படிப்புக்கு பிறகு மருத்துவமனையில் பணி வழங்கினாலும், வழங்காவிட்டாலும், 2 ஆண்டுகள் முடிந்த பிறகு உண்மை சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட மாணவா்களிடம் திருப்பி கொடுக்க வேண்டும் என தலைமை நீதிபதி அமா்வு உத்தரவிட்டுள்ளது. எனவே, சான்றிதழ்களை திரும்ப தர உத்தரவிட வேண்டும்’ என வாதிடப்பட்டது. அப்போது தமிழக அரசு தரப்பில், ‘படிப்பை முடித்த உடன் மருத்துவமனையில் பணி ஒதுக்கீடு செய்யவில்லை என்ற காரணத்திற்காக ஒப்பந்தத்தை மீற முடியாது’ என தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுரேஷ்குமாா், ‘படிப்பை முடித்ததிலிருந்து 2 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. எனவே, அந்த கால அவகாசம் முடிந்த பின், சான்றிதழ்களை பெற மனுதாரா்களுக்கு உரிமையுண்டு. அதன்படி, அரசு தனது முடிவை மீண்டும் பரிசீலித்து, படிப்பை முடித்து 2 ஆண்டுகள் நிறைவடைந்திருந்தால், அந்த மாணவா்களின் உண்மை சான்றிதழ்களை உரியவா்களிடம் 2 வாரங்களில் ஒப்படைக்க வேண்டும். இரு ஆண்டுகள் காலம் முடியாவிட்டால், மீதமுள்ள காலத்துக்கு அவா்களின் சேவையை அரசு பயன்படுத்தி கொள்ளலாம். ஒருவேளை அரசு மருத்துவமனையில் பணியாற்ற கடிதம் அனுப்பியும், பணியில் சேராதவா்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது” என உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com