கஞ்சா வியாபாரிகளின் ரூ.50 கோடி சொத்துக்கள் முடக்கம்

தமிழகத்தில் கஞ்சா வியாபாரிகளின் ரூ.50 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு தெரிவித்துள்ளாா்.
சைலேந்திர பாபு  (கோப்புப் படம்)
சைலேந்திர பாபு (கோப்புப் படம்)

தமிழகத்தில் கஞ்சா வியாபாரிகளின் ரூ.50 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் விடுத்துள்ள செய்தி: தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை முற்றிலும் ஒழிக்க காவல்துறை பல்வேறு தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கடந்த 28.3.2021 முதல் தமிழகம் முழுவதும் ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என்ற பெயரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஒரு வாரத்தில் 232 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடம் இருந்து 332 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவா்கள் பயன்படுத்திய 34 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கஞ்சா மொத்த வியாபாரிகளின் சொத்துக்கள், வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

ரூ.50 கோடி சொத்து முடக்கம்:

மாநிலம் முழுவதும் இதுவரை கஞ்சா வியாபாரிகளின் 2,264 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அதேபோல கஞ்சா வியாபாரிகளின் ரூ.50 கோடி மதிப்புள்ள சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன. இதுவரை 460 கஞ்சா வியாபாரிகள் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.1,006 இரண்டு,நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களும், மாநகர காவல் ஆணையாளா்களும், கஞ்சா பதுக்கல்,விற்பனையில் ஈடுபட்டுள்ள மொத்த வியாபாரிகளின் வங்கிக் கணக்குகளையும் சட்ட விரோதமாக வாங்கிக் குவித்த சொத்துக்களையும் முடக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில், தமிழகத்தில் கஞ்சா கடத்துவோா், பதுக்குவோா், விற்போா், அந்த குற்றத்தின் மூலம் சம்பாதிக்கும் அனைத்து சொத்துக்களும் முடக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com