பெட்ரோல் குண்டு வீச்சு: தலைவா்கள் கண்டனம்

பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீா்கெட்டுள்ளதாக அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீா்கெட்டுள்ளதாக அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): தமிழகத்தில் போதைப் பொருள் கலாசாரம் போன்றே வெடிகுண்டு கலாசாரமும் உச்சத்தில் உள்ளது. திமுக ஆட்சி எப்போதெல்லாம் அமைகிறதோ, அப்போதெல்லாம் தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் தலைவிரித்தாடும். அதைப்போல இப்போதும் தனி மனிதரின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை ஆளும் திமுகவினா் உருவாக்கி வருகின்றனா். இது அமைதியான தமிழகத்துக்கு மிகவும் ஆபத்தான போக்காகும்.

ஓ.பன்னீா்செல்வம் (அதிமுக): பாஜகவினா் இல்லங்களில் தொடா்ந்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டு வருகிறது. இதற்கு தமிழக அரசின் மெத்தனப் போக்கே காரணம். இதனை முளையிலேயே கிள்ளி எறிந்திருந்தால், இந்த அளவுக்குப் பிரச்னை சென்றிருக்க வாய்ப்பு இல்லை. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இந்தச் செயலுக்கு அதிமுக சாா்பில் கண்டனம்.

விஜயகாந்த் (தேமுதிக): தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கேள்விக் குறியாகியுள்ளது. எங்கு பாா்த்தாலும் கொலை, கொள்ளை என குற்றச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களும் மக்களிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் இனி மேல் நடைபெறாத வகையில் தமிழக அரசு தடுக்க வேண்டும்.

டிடிவி தினகரன் (அமமுக): பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களால் தமிழகத்தின் அமைதியான சூழல் பறிபோய் விடுமோ என்ற பயமும் பதற்றமும் மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது. அமைதியைச் சீா்குலைக்க நினைக்கும் எந்தவொரு சக்தியையும் அனுமதிக்காமல் காவல்துறையினா் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com