பாரதியாரை மற்ற கோணங்களிலும் அறிவது அவசியம்: டாக்டர் சுதா சேஷய்யன்

மகாகவி பாரதியாரை கவிதையில் மட்டுமல்லாமல், உரைநடை உள்ளிட்ட மற்ற கோணங்களிலும் அறிவது அவசியம் என்றார் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன்.
விழாவில் பேசுகிறார் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன். (வலது) நிகழ்வில் பங்கேற்றோர்.
விழாவில் பேசுகிறார் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன். (வலது) நிகழ்வில் பங்கேற்றோர்.


தஞ்சாவூர்: மகாகவி பாரதியாரை கவிதையில் மட்டுமல்லாமல், உரைநடை உள்ளிட்ட மற்ற கோணங்களிலும் அறிவது அவசியம் என்றார் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற பாரதியார் நினைவு நூற்றாண்டுப் பன்னாட்டு இருநாள் ஆய்வரங்கத்தின் நிறைவு விழாவில் அவர் மேலும் பேசியது:

உரைநடை என்பது தமிழுக்குப் புதிதல்ல. தொல்காப்பியம் கூட உரைநடை பற்றிப் பேசுகிறது. உரைநடையோடு செய்யுளையும் சேர்த்துக் கொடுக்கக்கூடிய நூல்கள் தமிழில் இருந்துள்ளன. என்றாலும், இப்போது கிட்டியிருப்பது சிலப்பதிகாரமே உரையோடு கூடிய செய்யுள் என்பதாகப் புலப்படுகிறது. ஆனால்,  மகாகவி பாரதி வந்த பிறகுதான் உரைநடை எப்படி இருக்க வேண்டும் என்கிற இலக்கணத்துடன் அப்படியே பதிப்பிக்கப்பட்டது. மகாகவி பாரதி எல்லா வகையிலும் உரைநடையை எழுதியிருக்கிறார்.

கவிதையில் இல்லாத பலன் உரைநடையில் உண்டு. கவிதை எல்லோருக்கும் புரிய வேண்டும் என்ற அவசியமில்லை. படித்தவர்கள், பண்டிதர்களுக்கு கவிதை புரியலாம். ஆனால், சமுதாயத்தில் சாதாரணமானவர்களுக்கும் புரிய வைப்பது உரைநடை. தகவல்கள் பலருக்கும் தெரிய வேண்டுமானால், உரைநடை அவசியமாகிறது. இதனால்தான் உரைநடையை மகாகவி பாரதியார் அதிகமாகப் பயன்படுத்தியிருக்கிறார். 

மகாகவி பாரதியாரின் கவிதைகளைப் படித்தவர்களுக்குத் தெரியும். அவருடைய சமகால கவிஞர்கள் தொட்டுப் பார்க்காத இடங்களையெல்லாம், மகாகவி பாரதியார் தொட்டுப் பார்த்தார். அவருடைய சமகால கவிஞர்களில் பலரும் நினைத்துப் பார்க்காத ரஷியாவையும், பெல்ஜியத்தையும், மார்க்சியத்தையும், பிஜி தீவையும் மகாகவி பாரதியார் நினைத்துப் பார்த்ததுடன், அதைக் கவிதையிலும் கொடுத்தார். இதன் மூலம், மகாகவி பாரதியார் ஒரு இதழியலாளர் என்பது நமக்குப் புரியும். அவர் பத்திரிகையாளராகவும் செயல்பட்டதால், உலகத்தில் நிலவிய பல்வேறு தகவல்களை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது. 

வெளிநாடுகளில் வெளியான பத்திரிகைகளை எல்லாம் மகாகவி பாரதியார் வாங்கிப் படித்ததால், உலக அரங்கில் நிகழ்ந்த நிகழ்வுகளை உள்வாங்கிக் கொண்டு, அவற்றை நம் சமுதாயத்துக்குப் பொருத்தமாகத் தந்தார். அவ்வாறு தரும்போது உரைநடைக்கு இருக்க வேண்டிய கடமையை நிறைவேற்றினார். 

அவரது உரைநடையைத் தொலைநோக்குப் பார்வை,  ஆய்வு,  மேலதிகச் செயல்பாடு, நுண்ணறிவு ஆகிய 4 கோணங்களில் ஆய்வாளர்கள், மாணவர்கள் நோக்க வேண்டும். 

இன்றைய காலகட்டத்தில் பாரதியாரின் உரைநடையைப் படிக்கக் கூடியவர்களுக்கு அவரது மொழி நடை குறித்து ஒரு சிக்கல் தோன்றலாம். அவர் வாழ்ந்த காலத்தில் இப்போது நாம் பயன்படுத்தக்கூடிய பல்வேறு தமிழ்ச் சொற்கள் கிடையாது. அப்போது வழக்கத்தில் இருந்த உத்தியோகஸ்தர், ராஜாங்கத்தார், கவர்மெண்டார், அபிமானம், சரீர பயிற்சி உள்ளிட்ட சொற்களையே பயன்படுத்தினார். 

ஆனால், அதே மகாகவி பாரதியிடம் புதிய தமிழ்ச் சொற்களையும் பார்க்க முடியும். முதலாளி, தொழிலாளி போல செல்வந்தருக்கு பொருளாளி என்ற புதிய சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். 

மகாகவி பாரதியாருக்கு இருந்த உரைநடை போன்ற மற்ற முகங்களை நாம் மறந்திருந்தோம். அந்த முகங்களை வெளிக்கொணரும் வகையில் இந்த ஆய்வரங்கம் நிகழ்ந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. மகாகவி பாரதியாரின் மற்ற முகங்களை (திறமைகளை) வெளிக்கொணரும் வகையில் இப்பல்கலைக்கழகம் மேலும் பல ஆய்வரங்கங்களை நடத்த வேண்டும் என்றார் சுதா சேஷய்யன்.

விழாவுக்குத் தலைமை வகித்த துணைவேந்தர் வி. திருவள்ளுவன் பேசியது: மகாகவி பாரதி எட்டயபுரத்தில் பிறந்திருந்தாலும், அவன் உலகக் கவிஞன். தனக்காக வாழாமல் தன்னைச் சுற்றியுள்ளவர்களைப் பற்றிச் சிந்தித்தவன். பலரும் சொல்வதைப்போல, பாரதியை மகாகவி எனச் சொல்வதை விட, அவரை பெருங்கவிஞர் எனக் கொண்டாட வேண்டும். 

மகாகவி பாரதிக்குள் இருக்கும் கவிதை வீச்சை அவரது கவிதைகள் அனைத்திலும் நாம் காண்கிறோம். இந்திய மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து பாரததேவி என்ற புதிய தெய்வத்தைப் படைத்தார். அவருக்குள் கண்ணனும், புத்தரும், இயேசுவும், அல்லாவும் ஒரு தெய்வமாகக் காட்சி தந்தனர். 

மகாகவி பாரதி சட்டென்று மறைந்துவிடும் நீர்க்குமிழி அல்ல. அவன் பற்ற வைத்த நெருப்பு இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது. பாரதிதான் தேசத்தை, விடுதலையை, சமதர்மத்தை, பெண் விடுதலையை, ஜாதி ஒழிப்பை நமக்குக் அடையாளம் காட்டினான். மகாகவி பாரதி மறைந்துவிட்டாலும், அவனது எழுத்துகளின் வழியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். நம்மையும் வாழ வைப்பான் என்றார் திருவள்ளுவன்.

விழாவில், இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஸ்ரீபிரசாந்தன், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்மொழித் துறைத் தலைவரும், பாரதியியல் ஆய்வறிஞருமான ய. மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, பதிவாளர் (பொறுப்பு) க. சங்கர் வரவேற்றார். நிறைவாக, ஓய்வு பெற்ற பேராசிரியர் உலகநாயகி பழனி நன்றி கூறினார். அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறைத் தலைவர் இரா. குறிஞ்சிவேந்தன் தொகுப்புரையாற்றினார்.

"பாரதி குறித்த தேடல்களை உலக அளவில் மேற்கொள்ள வேண்டும்'

விழாவில், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்மொழித் துறைத் தலைவரும், பாரதியியல் ஆய்வறிஞருமான ய. மணிகண்டன் பேசியது:

இந்தியாவில் இரு சக்கரவர்த்திகள் இருந்ததாக மதுரகவி பாஸ்கரதாஸ் குறிப்பிட்டுள்ளார். ஒருவர் வடஇந்திய கவிச்சக்கரவர்த்தி தாகூர்,  மற்றொருவர் தென்னிந்திய கவிச்சக்கரவர்த்தி பாரதியார் எனப் பாடியுள்ளார். நாம் மகாகவி என அவரைப் போற்றுகிறோம். அதற்கும் மேலாக கவிச்சக்கரவர்த்தி என பாரதியை மதுரகவி பாஸ்கரதாஸ் போற்றியிருக்கிறார். 

இதுவரை கிடைத்த ஆவணங்களில் மகாகவி பாரதி முழுமையாக இல்லை. மகாகவி பாரதியை நாம் முழுமையாக அறிந்து கொள்வதற்கான பல ஆவணங்களைக் கண்டெடுத்துள்ளோம். இதில், இளைய தலைமுறை இன்னும் முனைந்து தேடிக் கண்டெடுக்க வேண்டும். பாரதி குறித்த தேடல்களை உலக அளவில் மேற்கொள்ள வேண்டும். 

தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி நடத்திய பத்திரிகையில் அக்காலத்தில் மகாகவி பாரதியார் பற்றிய செய்திகள் வந்துள்ளன. எனவே, தென்னாப்பிரிக்காவில் தேடினால், இந்திய அளவில் மேற்கொள்ளப்படும் பாரதி குறித்த தேடல் உலக அளவில் விரிவாக்கம் அடையும். அதன் மூலம் பாரதியை இன்னும் முழுமைப்படுத்த முடியும். 

மகாகவி பாரதியைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளக்கூடிய வழி ஏற்பட்டுள்ளது. பாரதி குறித்து சமூகத்தில் உலவும் பல தவறான கருத்துகளை போக்குகிற விடைகள் தற்போது கிடைத்துள்ளன. எனவே, ஆய்வுகள் மூலம் மகாகவி பாரதி குறித்த தவறான கருத்துகளை நீக்கி, சரியாக தகவல்களை வெளிப்படுத்த இளைய தலைமுறையினர் முன்வர வேண்டும் என்றார் மணிகண்டன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com