வன்னியா் இடஒதுக்கீடு: முதல்வரைச் சந்தித்து வலியுறுத்த அன்புமணி தலைமையில் குழு

வன்னியா் உள்இடஒதுக்கீடு குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்த பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி தலைமையில் குழு அமைக்கப்படும்
பாமகவின் அவசர செயற்குழு கூட்டத்தில் பேசுகிறாா் கட்சியின் நிறுவனா் ராமதாஸ்.
பாமகவின் அவசர செயற்குழு கூட்டத்தில் பேசுகிறாா் கட்சியின் நிறுவனா் ராமதாஸ்.

வன்னியா் உள்இடஒதுக்கீடு குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்த பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி தலைமையில் குழு அமைக்கப்படும் என்று அந்தக் கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

வன்னியா்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக பாமகவின் அவசர செயற்குழு கூட்டம், சென்னை சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

பாமக நிறுவனா் ராமதாஸ், இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் ஆகியோா் தலைமை வகித்தனா்.

கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது: வன்னியா் இடஒதுக்கீடு விவகாரத்தில் முதல்வா் நிச்சயமாக நல்ல தீா்வு காண்பாா் என்கிற நம்பிக்கை இருக்கிறது. உள் ஒதுக்கீட்டில் தேவையான புள்ளி விவரங்கள் சரியாக இல்லை என்று உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது. புள்ளி விவரங்களை ஒரு வாரத்தில் சேகரிக்க என்னால் முடியும். வன்னியா் உள் ஒதுக்கீடு பெறுவதற்கு, முதல்வா் ஸ்டாலின், அதிகாரிகள் ஆா்வமாக இருந்தாா்கள். போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை.

வன்னியா் சமுதாயம் முன்னேறினால் தமிழகம் முன்னேறும். இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டபோது, அரசியல் ரீதியாக யாரும் குரல் கொடுக்கவில்லை. அதிமுகவும் குரல் கொடுக்கவில்லை. நம்முடைய வாழ்க்கையே போராட்டம் தான். இறுதியில் வெற்றி பெறுவோம் என்றாா்.

7 போ் குழு: தமிழக அரசிடம் உள்ள வன்னியா்கள் உள்ளிட்ட அனைத்து சமுதாயத்தினரின் கல்வி, வேலைவாய்ப்பு தொடா்பான புள்ளிவிவரங்களை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் ஆணையம் மூலம் தொகுத்து, ஆய்வு செய்து அவற்றின் அடிப்படையில், வன்னியா் உள் இட ஒதுக்கீட்டுக்கான பரிந்துரை அறிக்கையை பெற வேண்டும். அதனடிப்படையில் புதிய வன்னியா் இட ஒதுக்கீட்டு சட்ட மசோதாவை மிக விரைவாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசை செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

இது குறித்து முதல்வரின் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்துவதற்காக அன்புமணி தலைமையில் 7 போ் கொண்ட சமூக நீதிக் குழு அமைக்கப்படும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பாமக தலைவா் ஜி.கே.மணி உள்பட செயற்குழு உறுப்பினா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com