தடுமாற்றத்தில் சத்துணவுத் திட்டம்!

அத்தியாவசியப் பொருள்கள், காய்கறிகளின் தொடர் விலையேற்றம், பத்து ஆண்டுகளாக நிரப்பப்படாத காலிப் பணியிடங்கள் போன்ற காரணங்களால் தமிழக அரசின் மதிய உணவுத் திட்டம் தடுமாற்றம் கண்டு வருகிறது.
தடுமாற்றத்தில் சத்துணவுத் திட்டம்!

அத்தியாவசியப் பொருள்கள், காய்கறிகளின் தொடர் விலையேற்றம், பத்து ஆண்டுகளாக நிரப்பப்படாத காலிப் பணியிடங்கள் போன்ற காரணங்களால் தமிழக அரசின் மதிய உணவுத் திட்டம் தடுமாற்றம் கண்டு வருகிறது.
 வறுமையில் வாடிய கிராமப்புற ஏழை மாணவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு கல்வியையும் உணவையும் ஒருசேர வழங்கும் வகையில், 1955-ஆம் ஆண்டு, அன்றைய முதல்வர் காமராஜரால் கொண்டு வரப்பட்டது மதிய உணவுத் திட்டம்.
 பின்னர் இத்திட்டம் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் 1982-ஆம் ஆண்டு கிராமப்புறம், நகர்ப்புறம் என அனைத்துப் பகுதிகளுக்கும் "சத்துணவுத் திட்டம்' என்ற பெயரில் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.
 முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, மாணவர்களுக்கு சத்துணவுடன் ஐந்து நாள்களும் முட்டை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா, வாரத்தில் ஐந்து நாள்கள் கலவைசாதம் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார். இவ்வாறு மதிய உணவுத் திட்டம் பலவகைகளில் மேம்படுத்தப்பட்டது. இத் திட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகளால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
 30 ஆயிரம் காலிப் பணியிடங்கள்: தமிழகம் முழுவதும் சுமார் 43,000 பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்கள் மூலம் 55 லட்சம் மாணவ, மாணவிகள் மதிய உணவு பெறுகின்றனர். கடந்த பத்து ஆண்டுகளாக சத்துணவுத் திட்டத்தில் பணியாற்ற புதிதாக நபர்கள் தேர்வு செய்யப்படவில்லை.
 சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர்கள் பணி நியமனத்துக்கான அறிவிப்பு 2017, 2020-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்டு நேர்காணல் நடத்தி முடித்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் காலியிடங்கள் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 600 முதல் 1,500 பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழகம் முழுவதும் ஆயிரக் கணக்கில் காலிப் பணியிடங்கள் இருப்பதாகத் தெரிகிறது.
 இதன் காரணமாக, ஒரு பள்ளி மையத்தை மேற்பார்வை செய்துவந்த சத்துணவு அமைப்பாளர்கள் நான்கு மையங்களிலும், சமையலர்கள் மூன்று மையங்களிலும் பணியாற்றும் சூழல் தற்போது நிலவுகிறது. இந்தப் பணிச்சுமையால் ஊழியர்கள் பலர் மனோரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 அத்தியாவசியப் பொருள்கள் விலையேற்றம்: சத்துணவு மையங்களில் விறகு மூலம் உணவு தயாரிக்கப்பட்ட நிலையில், சமையல் எரிவாயு மூலமே உணவு சமைக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் 14.5 கிலோ எடை கொண்ட எரிவாயு உருளையின் விலை ரூ. 965.
 இதுதவிர, காய்கறிகளின் விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. அரசு வழங்கும் அரிசி, பருப்பு தவிர்த்து இதர மளிகைப் பொருள்களை பணியாளர்களே வாங்க வேண்டியது உள்ளது. அவற்றின் விலையேற்றமும் கவலையடையச் செய்வதாக உள்ளது.
 சத்துணவுத் திட்டத்தில் ஒரு மாணவருக்கு உணவுச் செலவினமாக ரூ. 2.25 மட்டுமே மாநில அரசால் வழங்கப்படுகிறது. ஆனால் இரு மடங்கு செலவாவதால் ஊழியர்கள் திணறுகின்றனர். அவர்கள் தினசரி மாணவர்களுக்கு சத்துணவு சமைத்து வழங்க மிகவும் சிரமப்படுகின்றனர். மாணவருக்கான உணவுச் செலவினத்தை அதிகரிக்க வேண்டும் என்று அவர்கள் பல்லாண்டுகளாகக் கோரி வருகின்றனர்.
 மூன்று துறைகளின் கட்டுப்பாடுகளால் அவதி: மதிய உணவுத் திட்டம் ஆரம்பத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் ஊரக வளர்ச்சித் துறை, சமூகநலத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கியது. தற்போது சமூகநலன் மற்றும் மகளிர் உரிமையியல் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.
 சமூக நலத்துறைக் கட்டுப்பாட்டில் இத்திட்டம் இருந்தபோதும், ஊழியர்கள் நியமனம், இடமாற்றம், கண்காணிப்பு, நிதி ஒதுக்கீடு போன்றவற்றை ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளே செய்தனர். தவிர, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மேற்பார்வையிடுதல், புகார் அனுப்புதல் போன்றவற்றை மேற்கொள்கின்றனர்.
 பெரும்பாலும் சத்துணவுத் துறையில் பெண் ஊழியர்களே அதிகமாக உள்ளதால் தேவையற்ற நெருக்கடிகளைச் சந்திக்கின்றனர்.
 எனவே ஒரே துறையின் கீழ் சத்துணவுத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் அத்துறை ஊழியர்களிடம் நீண்ட காலமாக உள்ளது.
 தனித் துறை தேவை
 இது குறித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் ப.சுந்தராம்பாள் கூறியதாவது:
 சத்துணவுத் திட்டத்திற்கென தனித் துறை உருவாக்கப்பட வேண்டும். மூன்று துறைகளின் கீழ் இந்த ஊழியர்கள் இருப்பதால் எவ்விதச் சலுகைகளோ, பதவி உயர்வோ கிடைக்காத நிலை உள்ளது.
 எங்கள் துறையில் இருக்க வேண்டிய 1.25 லட்சம் பணியிடங்களில் தற்போது 90,000 பேர் மட்டுமே உள்ளனர். 35,000 பணியிடங்கள் பத்து ஆண்டுகளாக காலியாக உள்ளன. 1982-85 காலகட்டத்தில் பணியில் சேர்ந்தோர் தற்போது ஓய்வு பெற்று வருகின்றனர். ஆட்சி மாறியதும் 16,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். ஆனால் அதற்கான எவ்வித அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.
 காலியிடங்கள் அதிகரிப்பால் கூடுதல் பணிச் சுமையால் ஊழியர்கள் தவித்து வருகின்றனர். இது ஒருபுறம் என்றால், மளிகை, காய்கறிகள், எரிவாயு விலையேற்றம் போன்றவை மேலும் மனவேதனையை ஏற்படுத்தி வருகின்றன.
 எனவே, ஒரு மாணவருக்கான சத்துணவுச் செலவினத்தை ரூ. 2.25 என்று வழங்குவதை ரூ. 5-ஆக உயர்த்தி வழங்க வேண்டும். அப்போதுதான் ஓரளவேனும் நிலைமையைச் சமாளிக்க முடியும். பட்ஜெட்டில் ரூ. 1,939 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவிக்கிறது. ஆனால் அந்த நிதி எதற்கானது எனத் தெரியவில்லை. 110 விதியின் கீழ் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் போன்ற அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவார் என எதிர்பார்க்கிறோம்.
 சமூகநலத் துறை அமைச்சரை புதன்கிழமை (ஏப். 6) நேரில் சந்தித்துப் பேச உள்ளோம். அப்போது எங்களுடைய பிரச்னைகள், கோரிக்கைகள் அனைத்தையும் எடுத்துரைக்க இருக்கிறோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com