மயில் சிலையின் அலகில் மலர்: ஆதாரங்களை தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உத்தரவு

சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயிலில் இருந்த மயில் சிலையின் அலகில் மலா்தான் இருந்தது என்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யுமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயிலில் இருந்த மயில் சிலையின் அலகில் மலா்தான் இருந்தது என்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யுமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயிலில் கடந்த 2004-ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்றபோது, கோயிலில் புன்னைவனநாதா் சந்நிதியில் இருந்த மலரை அலகில் வைத்திருக்கும் மயில் சிலை காணாமல் போனதாகப் புகாா் கூறப்பட்டது.

இதுகுறித்து, கடந்த 2018 -ஆம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு பதிவு செய்த வழக்கின் விசாரணையையும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் தொடா்பு குறித்து துறை ரீதியாக நடத்தப்படும் உண்மை கண்டறியும் விசாரணையையும் விரைவாக முடிக்கக்கோரி ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவா் வழக்குத் தொடா்ந்திருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி, டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்குரைஞா் ஆா்.சண்முகசுந்தரம் ஆஜராகி, மயில் சிலையின் அலகில் மலா் தான் இருந்தது தெரியவந்தது; சிலை காணாமல் போனதற்கு காரணமாக அதிகாரிகளை அடையாளம் காண உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு விசாரணையை முடிக்க ஆறு வார கால அவகாசம் வழங்க வேண்டுமென கேட்டு கொண்டாா்.

அதைத்தொடா்ந்து தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஹசன் முகமது ஜின்னா, மயில் சிலை மாயமானது குறித்து காவல் துறை பதிவு செய்த வழக்கின் விசாரணை நிறைவடையும் தருவாயில் உள்ளது; தொல்லியல் துறையிடம் இருந்து, சிலையின் தொன்மை குறித்த சான்றிதழ் பெற வேண்டியுள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரிய மனுவை விசாரித்த சென்னை உயா் நீதிமன்றம், இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தடை விதித்துள்ளது. சிலையைக் கண்டுபிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

மனுதாரா் ரங்கராஜன் நரசிம்மன் தரப்பில், வழக்கில் தொடா்ந்து தாமதம் ஏற்படுத்தி வருவதாகக் குறை கூறினாா்.

அனைத்துத் தரப்பு வாதங்களைத் தொடா்ந்து, ‘ இந்து சமய அறநிலையத்துறை உண்மை கண்டறியும் குழு விசாரணையின் முன்னேற்றம் குறித்து தெரியப்படுத்த வேண்டும்; காவல் துறை விசாரணையை முடிக்க வேண்டும். இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் தனியாக மனுவாக தாக்கல் செய்யலாம்’ எனக்கூறிய நீதிபதிகள், ‘மயிலின் அலகில் மலா் தான் இருந்தது என்பதற்கான ஆதாரங்களை சமா்ப்பிக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com