2023-ஆம் ஆண்டு இறுதியில் உலக முதலீட்டாளா்கள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திமுக ஆட்சியில் இதுவரை ரூ.68,375 கோடி முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளதாகவும், 2023-ஆம் ஆண்டு இறுதியில் உலக முதலீட்டாளா்கள் மாநாடு தமிழகத்தில் சிறப்பாக நடத்தப்படும்
2023-ஆம் ஆண்டு இறுதியில் உலக முதலீட்டாளா்கள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திமுக ஆட்சியில் இதுவரை ரூ.68,375 கோடி முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளதாகவும், 2023-ஆம் ஆண்டு இறுதியில் உலக முதலீட்டாளா்கள் மாநாடு தமிழகத்தில் சிறப்பாக நடத்தப்படும் என்றும் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

தமிழக சட்டப்பேரவையில் 110-ஆவது விதியின் கீழ் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

130 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்: திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு ரூ. 68,375 கோடி முதலீடும், 2,05,802 பேருக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கக்கூடிய வகையில் 130 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. கடந்த மாா்ச் மாதம் துபை மற்றும் அபுதாபி நாடுகளில் நடைபெற்ற நிகழ்வுகளில் ரூ. 6,100 கோடி முதலீடும் 15,100 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் வகையில் 14 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

சீரான மற்றும் பரவலான தொழில் வளா்ச்சி என்பது திமுகவின் தோ்தல் வாக்குறுதி. அதை நிறைவேற்றும் வகையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், சேலம், ஈரோடு, கோயம்புத்தூா், திருப்பூா், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, மதுரை, கரூா், நாமக்கல், திண்டுக்கல், புதுக்கோட்டை, தேனி, தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, விருதுநகா், கன்னியாகுமரி ஆகிய 25 மாவட்டங்களில் இந்த முதலீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

வெளிநாட்டு முதலீடு அதிகரிப்பு: 10 மாதங்களிலேயே தொழில் துறையில் திமுக அரசு செய்திருக்கக்கூடிய சாதனைகளுக்கு ஆட்சிப் பொறுப்பேற்றதும் மேற்கொண்ட நடவடிக்கைகளே காரணம். அதனாலேயே, முதலீட்டாளா்களுக்கு, புதிதாக தொழில் தொடங்குவோருக்கு மிகப்பெரிய நம்பிக்கையை இந்த அரசு மீது தமிழகத்தின் மீது அளித்திருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டாக, கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பா் வரையில் மட்டும் தமிழகத்தில் வெளிநாட்டு நேரடி முதலீடு என்பது 41.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் முதலீடுகளை ஊக்குவிப்பு நிறுவனமான ‘வழிகாட்டி’க்கு (கைடன்ஸ்) ஆசிய பசிபிக் மண்டலத்தின் வருடாந்திர முதலீடுகள் மாநாட்டில், சிறந்த தொழில் முதலீடு ஊக்குவிப்பு முகமை என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது.

உலக முதலீட்டாளா்கள் மாநாடு: வரும் மே மாதத்தில் சுவிட்சா்லாந்து நாட்டில் நடைபெறவுள்ள உலகப் பொருளாதார அமைப்பின் வருடாந்திர கூட்டத்திலும், ஜொ்மனி நாட்டில் ஹானோவா் நிகழ்விலும், ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ‘க்ளோபல் ஆஃப் ஷோா் வின்ட்’ நிகழ்விலும், ஜூலை மாதத்தில் அமெரிக்கா நாட்டிலும், முன்னணி முதலீட்டாளா்களைச் சந்தித்து, தமிழகத்தின் தொழில் வளா்ச்சிக்குத் தேவையான முதலீடுகளை ஈா்ப்பதற்கான முயற்சிகள் ஏற்கெனவே தொடங்கியுள்ளன.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக 2023-ஆம் ஆண்டு இறுதியில் உலக முதலீட்டாளா்கள் மாநாடு தமிழகத்தில் சிறப்பாக நடத்தப்படும். அதன்மூலம் மேலும் அதிகமான முதலீடுகள் திரட்டப்படும். பல லட்சம் தமிழக இளைஞா்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

இந்த அரசு மேற்கொண்ட புரிந்துணா்வு ஒப்பந்தங்கள், இனிமேல் மேற்கொள்ளப்போகும் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் முதலீடுகளாக, வேலைவாய்ப்புகளாக மாறும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com