மானாமதுரை சித்திரைத் திருவிழாவில் புதிய அன்னம் வாகனம் வெள்ளோட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவில் வெள்ளிக்கிழமை மண்டகப்படிதாரர்களால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள புதிய அன்னவாகனம் வெள்ளோட்டம் நடைபெற்றது. 
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அன்னம் வாகனத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டது
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அன்னம் வாகனத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டது


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவில் வெள்ளிக்கிழமை மண்டகப்படிதாரர்களால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள புதிய அன்னவாகனம் வெள்ளோட்டம் நடைபெற்றது. 

சிவகங்கை தேவஸ்தான நிா்வாகத்துக்குள்பட்ட இக்கோயிலில் கரோனா பொது ஊரடங்கு காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக சித்திரை திருவிழா நடைபெறாத நிலையில், இந்தாண்டு திருவிழா தொடக்கமாக சோமநாதா் சந்நிதி முன்புள்ள கொடிமரத்தில் காலை 9. 40 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. அதன்பின்னா், கொடிமரத்துக்கு தா்ப்பைப்புல், மலா் மாலைகள் சாற்றி, கலச நீராலும் அபிஷேகப் பொருள்களாலும் அபிஷேகம் நடத்தி, பலவகை தீபாராதனை நடைபெற்றது.

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் சீரமைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப் பட்ட பூத வாகனம்.

சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்திற்கு உள்பட்ட மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் கரோனா பொது ஊரடங்கு காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக சித்திரை திருவிழா நடைபெறாத நிலையில், இந்தாண்டு சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதையொட்டி கோயில் வளாகம் முழுவதும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இரவில் ஜொலிக்கிறது. திருவிழாவின் முதல் நாளான நேற்று வியாழக்கிழமை இரவு ஆனந்தவல்லி அம்மன் சிம்ம வாகனத்திலும் பிரியாவிடை சமேதமாய்  சோமநாதர் சுவாமியும் சர்வ அலங்காரத்தில் மண்டகப்படியில் எழுந்தருளி அருள்பாலித்து பின்னர் வீதி உலா வந்தனர். 

சித்திரைத் திருவிழா மண்டகப்படிதாரரான மானாமதுரை ஐந்துகரை குலாலர் சமூகத்தினர் சார்பில் புதிதாக அன்னம் வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மண்டகப்படிதாரர்களுக்காக ஏற்கனவே கோயிலில் உள்ள பூத வாகனம் சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோயிலில் உள்ள சுவாமி புறப்பாடுக்கான பழைய வாகனங்கள் பழுது நீக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வருகிறது. 

வெள்ளோட்டத்துக்காக  கோயிலை விட்டு வெளியே எடுத்து வரப்பட்ட அன்னம் வாகனம்.

மாமல்லபுரம் கதிரவன் தலைமையிலான சிற்பிகள் வாகனங்களை தயாரித்தும் பழுது நீக்கியும் வருகின்றனர். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அன்னம் வாகனத்தின் வெள்ளோட்டத்தை முன்னிட்டு ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் அன்னம் வாகனத்தின் மேல் கும்பம் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டன. 

சீரமைக்கப்பட்ட பூத வாகனத்துக்கும் பூஜைகள் நடத்தப்பட்டது. அதன்பின் தீபாராதனை முடிந்து அன்னம் வாகனம் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் வெள்ளோட்டமாக கொண்டு செல்லப்பட்டு பின்னர் கோயிலுக்குள் எடுத்துச்செல்லப்பட்டது. 

வாகனத்தின் வெள்ளோட்ட திற்கான பூஜைகளை சோமாஸ் கந்தன் பட்டர், தெய்வசிகாமணி என்ற சக்கரை பட்டர், குமார் பட்டர் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் நடத்தினர். வெள்ளோட்ட நிகழ்ச்சியில் மானாமதுரை ஐந்துகரை குலாலர் சமூகத்தினர் உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com