அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி

புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்: அமைச்சா் பொன்முடி

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி அறிவித்தாா்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை உயா்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் பொன்முடி வெளியிட்ட அறிவிப்புகள்:

கிராமப்புற மாணவா்களுக்கு அரசு கல்லூரிகள் சிறந்த வாய்ப்பினை ஏற்படுத்தி தருகின்றன. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகள் உயா்கல்வி பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. அதனால், அரசு கல்லூரிகளின் தேவை அதிகரித்துள்ளதால் ரூ.167 கோடி மதிப்பீட்டில் 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்படும்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், ஈரோடு மாவட்டம் அந்தியூா், கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி, தஞ்சாவூா் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியாா்சத்திரம், கடலூா் மாவட்டம் வடலூா், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூா் ஆகிய 10 இடங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.

பரமக்குடியில் இரண்டு இருபாலா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. கிராமப்புற மாணவிகளின் சோ்க்கை விகிதத்தை அதிகரிக்கும் வகையில் 2019-20-ஆம் ஆண்டில் அரசு கல்லூரியாக மாற்றப்பட்ட பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி, அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக மாற்றப்படும்.

அரசு கல்லூரிகளில் உள்கட்டமைப்பு: 2022-23 நிதி நிலை அறிக்கையில் அரசு கல்லூரிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ரூ.200 கோடி செலவினத்தில் 26 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளிலும், 55 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் வகுப்பறைகள், ஆய்வகங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும்.

அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவா்கள் அயல்நாட்டு மொழிகளைக் கற்பதற்கும், உயா்படிப்புக்கான வாய்ப்பு மற்றும் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு ஆகியவற்றை பெறுவதற்கும் தன்னிறைவு மையமாக 11 அரசு பொறியியல் கல்லூரிகளில் அயல்நாட்டு மொழிகள் கற்பித்தல் மையம் ரூ.11 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com