கெயில் எரிவாயு குழாய் பதிப்புத் திட்டத்தை எதிர்த்து விவசாயி தற்கொலை

கெயில் எரிவாயு குழாய் பதிப்புத் திட்டத்தை எதிர்த்து விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 
உயிரிழந்த விவசாயி கணேசனின் சடலத்துடன் மறியலில் ஈடுபட்டு வரும் விவசாயிகள்.
உயிரிழந்த விவசாயி கணேசனின் சடலத்துடன் மறியலில் ஈடுபட்டு வரும் விவசாயிகள்.

தருமபுரி: கெயில் எரிவாயு குழாய் பதிப்புத் திட்டத்தை எதிர்த்து விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கேரளம் மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக கர்நாடகம் மாநிலம் மங்களூர் வரை கெயில் நிறுவனம் சார்பில் எரிவாயு குழாய் பதிப்புத் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்திட்டத்துக்காக குழாய்கள் பதிக்க விளை நிலங்களில் கெயில் நிறுவன ஊழியர்கள் கடந்த சில நாள்களாக அளவீட்டு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தப் பணிகளுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து விளை நிலங்களை குழாய் பதிப்புத் திட்டத்துக்கு கையகப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களாக இண்டூர், பாலவாடி சுற்று வட்டார பகுதிகளில் விளை நிலங்கள் அளவீட்டு பணிகள் நடைபெற்று வந்தன. இதனை கண்டித்து செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை அப்பகுதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம செய்தனர். இந்த இரண்டு நாள்களும் போராட்டத்தில் பங்கேற்ற கரியப்பன அள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன் (43) என்பவர் திடிரென அப்பகுதியில் உள்ள அவரது நிலத்துக்கு சென்று அங்கிருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் விவசாயிகள் கணேசனின் சடலத்துடன் தருமபுரி- ஒகேனக்கல் சாலையில் ஏ.செக்காரப்பட்டியில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.கலைச்செல்வன், சார் ஆட்சியர் சித்ரா விஜயன் மற்றும் வருவாய் துறையினர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். உயிரிழந்த விவசாயி கணேசனின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் மற்றும் அவரது வாரிசுகளுக்கு அரசு பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com