அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், ஆழ்வார்குறிச்சியில் பங்குனித் தேரோட்டம்

அம்பாசமுத்திரம் காசிநாதசாமி கோயில் பாபநாசம் பாபநாச சாமி, சிவசைலம் சிவசைலநாத சாமி கோயில்களில் பங்குனித் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அம்பாசமுத்திரம் காசிநாதசாமி கோயில் பங்குனித் தேரோட்டத்தில் பக்தர்கள் வடம்பிடித்து தேரிழுக்கின்றனர்.
அம்பாசமுத்திரம் காசிநாதசாமி கோயில் பங்குனித் தேரோட்டத்தில் பக்தர்கள் வடம்பிடித்து தேரிழுக்கின்றனர்.

அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம் காசிநாதசாமி கோயில் பாபநாசம் பாபநாச சாமி, சிவசைலம் சிவசைலநாத சாமி கோயில்களில் பங்குனித் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
 
அம்பாசமுத்திரம் அன்னை மரகதாம்பிகை உடனுறை காசிநாதர் கோயிலில் பங்குனித் திருவிழா மற்றும் பாபநாசம் அருள்மிகு உலகாம்பிகை உடனுறை அருள்மிகு பாபநாச சுவாமி கோயில் சித்திரை விசுத் திருவிழா ஏப். 5 செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாள் தோறும் காலை மாலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனையும் காலை மாலை சுவாமி அம்பாள் வீதி உலாவும் நடைபெற்றது. 

8 ஆம் திருநாள் ஏப். 12 செவ்வாய்கிழமை காலை 5 மணிக்கு நடராஜர் வெள்ளை சாத்தி, 9 மணி வெள்ளை சாத்தி வீதி உலா, பகல் 11 மணிக்கு பச்சை சாத்தியைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு சாமி அம்பாள் அகஸ்தியருக்கு திருமணக் கோலத்தில் காட்சியளித்தனர்.

 9 ஆம் திருநாள் ஏப். 13 புதன்கிழமை தேரோட்டத்தையொட்டி காலை 6 மணிக்கு சுவாமி அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளியதையடுத்து காலை 9 மணிக்கு பக்தர்கள் திருத்தேர் வடம்பிடித்து இழுத்தனர். இரவு 9 மணிக்கு பூம்பல்லக்கில் சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெற்றது. 10 ஆம் திருநாள் ஏப். 14 வியாழக்கிழமை காலை 10.30 முதல் பகல் 12 மணிக்குள் தீர்த்தவாரி நடைபெறும்.

ஆழ்வார்குறிச்சியில் நடைபெற்ற சிவசைலநாத சாமி கோயில் பங்குனித் தேரோட்டத்தில் வடம்பிடித்து தேரிழுக்கும் பக்தர்கள்.

பாபநாசம், பாபநாச சுவாமி திருக்கோயிலில் சித்திரை விசுத் திருவிழா ஏப். 5 செவ்வாய்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சுவாமி அம்பாள் விக்கிரமசிங்கபுரத்திற்கு எழுந்தியருளினர். அங்கு நாள் தோறும் காலை மாலை சிறப்ப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனையும் வீதி உலாவும் நடைபெற்றது.

8 ஆம் திருநாளான ஏப். 12 செவ்வாய்க்கிழமை காலை ஸ்ரீ நடராஜர் கேடயத்தில் வெள்ளை சாத்தி புறப்பாடு, மாலை 4 மணிக்கு பச்சை சாத்தி அலங்காரத்தில் புறப்பாடு நடைபெற்றது. 9ஆம் திருநாளான ஏப். 13 புதன்கிழமை தேரோட்டத்தையொட்டி காலை 9 மணிக்கு சுவாமி அம்பாள் தேருக்கு எழுந்தருளியதையடுத்து பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர்.

10 ஆம் திருநாளான ஏப். 14 வியாழக்கிழமை பகல் 1 மணிக்கு சித்திரை விசு, தீர்த்தவாரியும், இரவு 8 மணிக்கு ஸ்ரீ பாபநாசர் உலகாம்பிகை தெப்ப உற்சவமும், ஏப். 15 அதிகாலை 1 மணிக்கு சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் திருமணக் கோலத்தில் அகஸ்திய முனிவருக்கு காட்சி கொடுத்தலும் நடைபெறும்.

விக்கிரமசிங்கபுரத்தில் பங்குனித் தேரோட்டத்தையொட்டி வடம்பிடித்துத் தேரிழுக்கும் பக்தர்கள்.

சிவசைலம், அருள்தரும் பரமகல்யாணி அம்பாள் உடனுறை அருள்மிகு சிவசைலநாத சாமி திருக்கோயிலில் பங்குனிப் பெருந்திருவிழா ஏப். 3 ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகியது. தொடர்ந்து சுவாமி அம்பாள் ஆழ்வார்குறிச்சிக்கு எழுந்தருளி அங்கு நாள் தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காராம், ஆராதனை மற்றும் காலை மாலை வீதி உலா நடைபெற்று வந்தது. ஏப். 5 வியாழக்கிழமை திருத்தேர்க்கு கால்நாட்டு நடைபெறுகிறது.

11ஆம் திருநாளான ஏப். 13 புதன்கிழமை தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு சாமி அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளினர். காலை 7.30 மணிக்கு பக்தர்கள் வடம்பிடித்துத் தேர் இழுத்தனர். சாமி தேரை ஆண்களும், அம்மன் தேரை பெண்களும் வடம்பிடித்து இழுத்தனர்.

நிகழ்ச்சியில் ஆழ்வார்குறிச்சி, சிவசைலம், பொட்டல்புதூர், பாப்பான்குளம், ஆம்பூர் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேர் இழுத்து வழிபட்டனர். 12 ஆம் திருநாளான ஏப். 14 வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு சாமி, அம்பாள் வெள்ளிச் சப்பரத்தில் சிவசைலத்திற்கு எழுந்தருளுகின்றனர். இரவு 10 மணிக்குத் தீர்த்தவாரியைத் தொடர்ந்து சாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் அத்ரி மஹரிஷிக்குக் காட்சியளிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com