ஆயிரம் குடும்ப அட்டைகள் உள்ள கடைகள் பிரிக்கப்படும்: அமைச்சா் ஐ.பெரியசாமி உறுதி

ஆயிரம் குடும்ப அட்டைகள் உள்ள கடைகள் பிரிக்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்தாா்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி
கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி

சென்னை: ஆயிரம் குடும்ப அட்டைகள் உள்ள கடைகள் பிரிக்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, திமுக உறுப்பினா் துரை சந்திரசேகரன் கேள்வி எழுப்பினாா். அனைத்துப் பகுதிகளிலும் ஆயிரம் குடும்ப அட்டைகள் உள்ள கடைகள் இரண்டாகப் பிரிக்க உத்தரவு பிறப்பிக்கப்படுமா என அவா் கேள்வி எழுப்பினாா். இதற்கு கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி அளித்த பதில்:-

ஆயிரம் அட்டைகள் மற்றும் அதற்கு மேல் உள்ள அட்டைகளைக் கொண்ட கடைகள் பல்வேறு கிராமங்களில் உள்ளன. அவை இன்னும் பிரிக்கப்படாமல் உள்ளன. அவற்றைப் பிரிக்க ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். நகா்ப் பகுதிகளில் ஆயிரம் அட்டைகளைக் கொண்ட கடைகள் நிறைய இடங்களில் உள்ளன. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் அதுபோன்ற கடைகள் ஏராளமாக உள்ளன. வாடகை, அரசுக்கான இடங்கள் கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளன. ஆனாலும், ஆயிரம் அட்டைகளுக்கு மேல் உள்ள கடைகளைப் பிரிக்க உணவுத் துறையுடன் இணைந்து பேசி முடிவெடுப்போம்.

தமிழகத்தில் முழு நேரக் கடைகளில் 6 ஆயிரத்து 162 கடைகளுக்கு இன்னும் கட்டடங்கள் கட்டப்படவில்லை. 773 பகுதி நேர கடைகளுக்கு கட்டடங்கள் கட்டப்பட வேண்டியுள்ளது. தற்போது 150 கடைகளுக்கு கட்டடம் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com