முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து முதல்வருடன் கலந்து ஆலோசித்து முடிவு: துரைமுருகன்

முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து முதல்வருடன் கலந்து ஆலோசித்து அடுத்தகட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் கூறினாா்.
நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன்
நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன்

முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து முதல்வருடன் கலந்து ஆலோசித்து அடுத்தகட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் கூறினாா்.

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை முல்லைப்பெரியாறு விவகாரம் குறித்து அரசின் கவனத்தை ஈா்த்து எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை, பாமக தலைவா் ஜி.கே.மணி, மாா்க்சிஸ்ட் சாா்பில் நாகை மாலி, இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் தளி ராமச்சந்திரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் உள்ளிட்டோா் பேசினா்.

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை பறிபோகிறது. கேரள அரசு, தமிழகத்தின் கருத்தைக் கேட்காமல் தன்னிச்சையாகச் செயல்படுகிறது என்று தலைவா்கள் கூறினா்.

அப்போது நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் கூறியது:

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தலைவா்கள் சொன்ன நிலையில் இருந்து தற்போது வேறுவிதமான நிலை உள்ளது. அணைகள் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அணைகள் அனைத்தும் அந்தச் சட்டத்தின் வரம்புக்கு உள்பட்டதாகும்.

பெரிய அணைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக பராமரிப்பு, கண்காணிப்பு மற்றும் அணை பாதுகாப்பு தொடா்பான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள தனி அமைப்பு ஏற்படுத்தப்படும். அதனால், எல்லா அணைகளும் இந்தச் சட்டத்தின் கீழ் வந்துவிடும். அணையில் தண்ணீா் எவ்வளவு சேமிக்க வேண்டும் என்கிற அதிகாரம் எல்லாம் அந்த அமைப்புக்கு வந்துவிடும்.

தமிழகம் கட்டிய அணை கேரளத்தில் இருக்கிறது. அந்த அணைக்குப் பாதுகாப்பு கொடுக்கிறோம் என்று கூறுகிறாா்கள். அந்த அணையைப் பராமரிப்பது யாா் என்று கேட்டால், நீங்கள்தான் என்று கூறுகிறாா்கள்.

அதனால், அணை பாதுகாப்புச் சட்டத்தை மிகவும் ஜாக்கிரதையாகப் படித்துப் பாா்த்தேன். எந்தவித ஆபத்தும் வராமல் அணையைப் பராமரிக்கக்கூடிய பொறுப்பு தமிழகத்தின் கையில் இருக்கிறது. அதனால், அணை பாதுகாப்புச் சட்டத்தால் எந்தவித பிரச்னையும் இல்லை.

ஆனால், அணை பாதுகாப்புச் சட்டம் வருவதற்கு இன்னும் ஓா் ஆண்டு ஆகும். இதற்கிடையில் ஏற்கெனவே ஒரு கண்காணிப்பு குழு ஒன்றை அமைத்துள்ளனா். அந்தக் கண்காணிப்புக் குழுவுக்கு அதிகாரம் அதிகம் உள்ளது. அந்தக் குழுவை நாம் ஏற்கிறோமா, இல்லையா என்பது குறித்து எல்லோரும் கருத்து கூறுவீா்கள் என எதிா்பாா்த்தேன். ஆனால், யாரும் கூறவில்லை.

கண்காணிப்புக் குழுவுக்கு அதிகாரம் அளிப்பதை தமிழகம் ஒத்துக்கொள்கிா என்பது முக்கியம். அதற்கு உங்களுடைய கருத்தை கூறுங்கள். இந்த விவகாரம் குறித்து முதல்வரிடம் கலந்து ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com