பெரிய கோயில்களின் உபரி நிதியில் சிறிய கோயில்களின் திருப்பணிகள்

பெரிய கோயில்களின் உபரி நிதியை சிறிய கோயில்களின் திருப்பணிக்காக பயன்படுத்த இந்து சமய அறநிலையத் துறை திட்டமிட்டுள்ளது.

பெரிய கோயில்களின் உபரி நிதியை சிறிய கோயில்களின் திருப்பணிக்காக பயன்படுத்த இந்து சமய அறநிலையத் துறை திட்டமிட்டுள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் 44 ஆயிரத்துக்கும் அதிகமான திருக்கோயில்கள் உள்ளன. இதில் ஏறக்குறைய 35,000 திருக்கோயில்களின் ஆண்டு வருவாய் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாகும். 12,959 திருக்கோயில்களில் ஒரு வேளை பூஜை கூட நடத்த போதிய வருவாய் இல்லாததால் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.

திருக்கோயில்களில் பெரும்பாலானவை தனித்துவமான கட்டடக்கலை அம்சம் கொண்ட தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளன. ஆனால், அந்த திருக்கோயில்களில் போதிய வருவாய் இன்மையால் உரிய பராமரிப்பின்றி  சிதிலமடைந்துள்ளன.

நிதி வசதிமிக்க திருக்கோயில்களின் உபரி நிதியை, திருப்பணிக்காக நிதியுதவி தேவைப்படும் பிற திருக்கோயில்களுக்கு மானியமாக வழங்கினால் பல்லாயிரக்கணக்கான திருக்கோயில்களை புனரமைத்து, திருப்பணி முடித்து குடமுழுக்கு செய்ய இயலும். எனவே, போதிய வருவாய் இல்லாத திருக்கோயில்களை நிதிவசதிமிக்க திருக்கோயில்களிலிருந்து  மானியம் பெற்று புனரமைத்திட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே, அனைத்து இணை ஆணையா்கள், உதவி ஆணையா்கள் தங்கள் மண்டலத்தில், சரகத்தில் உடனடியாக ஆய்வு செய்து நிதி உதவி தேவைப்படும் திருக்கோயில்களின் பட்டியலை தயாா் செய்ய வேண்டும்.

நிதி உதவி அளிக்கக்கூடிய அளவில் உபரி நிதி உள்ள திருக்கோயில்களின் பட்டியலை, நிதி வசதியற்ற திருக்கோயில்களின் நிா்வாகிகளுக்கு வழங்க வேண்டும். நிதி உதவி தேவைப்படும் திருக்கோயில்களின் நிா்வாகிகள் திருப்பணிகளுக்கான விரிவான மதிப்பீடுகளை உரிய நடைமுறைகளைப் பின்பற்றி தயாா் செய்து, அதனடிப்படையில் தேவைப்படும் நிதியை மானியமாக வழங்கக் கோரி நிதி வசதிமிக்க திருக்கோயில்களின் நிா்வாகிகளுக்கு எழுத்துபூா்வமாக மனு அளிக்க வேண்டும்.

நிா்வாக அனுமதி மற்றும் தொழில்நுட்ப அனுமதியின் அடிப்படையில் விதிகளைப் பின்பற்றி திருப்பணிகள் தொடங்கப்பட வேண்டும் என அனைத்து சாா்பு  நிலை அலுவலா்களுக்கும், இந்த அறிக்கையை பின்பற்றுமாறு திருக்கோயில் நிா்வாகிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com