தஞ்சை தேர்த்திருவிழாவில் விபத்து: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

இந்த விபத்து எப்படி நடந்திருக்கும் என்பது குறித்து மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில் தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி விபத்து நேரிட்டதில் 11 பேர் பலியாகினர். இந்த விபத்து எப்படி நடந்திருக்கும் என்பது குறித்து மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி செந்தில்பாலாஜி இன்று சட்டப்பேரவையில் ஆற்றிய உரையில், தஞ்சாவூர் களிமேடு அப்பர் கோவில் தேரோட்டமானது களிமேடு பகுதியில் கடைசி பகுதிக்கு சென்று திரும்பும் போது, தேரின் பின்புறம் இணைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர் எடையின் காரணமாக எதிர் பாராதவிதமாக ஒரு பக்கமாக சப்பரம் இழுத்து செல்லப்பட்டு சப்பரத்தின் மேல் பகுதியானது ரோட்டின் ஓரத்தில் செல்லும் 33கேவி உயர் மின்னழுத்தக் கம்பியுடன் சப்பரத்தின் உச்சி பகுதி மின்கடத்து தூரத்தில் சென்றதால் 190 மில்லி செகண்டுக்குள் அதாவது 0.19 விநாடிக்குள் ரிலே இண்டிகேஷன் மூலம், கம்பியில் செல்லும் 33கேவி உயர் அழுத்த மின்சாரம் தானாகவே நின்று விட்டது. தேரானது இரும்பு சட்டங்கள் மற்றும் சீரியல் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தேரின் மேல் பகுதியில் தீ ஏற்பட்டது.

இந்த 33 கேவி மின்பாதை 110 கேவி தஞ்சாவூர் கிரிட் துணை மின்நிலையத்தில் இருந்து கரந்தை 33 கேவி துணைமின்நிலையத்திற்கு செல்லும் மின் பாதையாகும். இது தரை மட்டத்தில் இருந்து 23 அடிக்கும் மேலே பாதுகாப்பான உயரத்திலே செல்கிறது.

ஆனால், சப்பரத்தின் பின்புறம் உள்ள ஜெனரேட்டர் ஆஃப் ஆகாமல் ஓடிக் கொண்டே இருந்திருக்கிறது. மேலும், 33 கேவி மின்சாரம் தானாக நின்றபோதிலும், ஜெனரேட்டர் மூலம் தொடர்ந்து மின்சாரம் தேரின் விளக்குகளுக்கு சென்று கொண்டிருக்கிறது. அங்கிருந்த பொதுமக்கள் குறிப்பாக, அந்த சப்பரத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கவும், ஜெனரேட்டரை நிறுத்தவும் சப்பரத்தின் மீது தண்ணீர் ஊற்றினர் இவ்விபத்தில் 11 பேர் உயிர் இழந்தனர்.

33 கேவி உயர் அழுத்த மின்சாரம் உடனே நின்றபோதிலும், ஜெனரேட்டரிலிருந்து மின்சாரம், இரும்பு சட்டங்களின் மேலிருந்த சீரியல் விளக்குகளுக்கு தொடர்ந்து சென்றதால் அதன் மூலம் இம்மின்விபத்து ஏற்பட்டிருக்கலாம்.

மனிதநேயமிக்க முதல்வர் ஆறுதல் சொல்வதற்காக தஞ்சாவூர் நேரில் சென்றுள்ளார்கள். இந்த விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரித்து, இது போன்ற துயர நிகழ்வுகள் இனிமேல் வரக்கூடிய காலங்களில் நடைபெறாமல் தடுத்திடுவதற்கான பரிந்துரைகளையும் அரசுக்கு அளித்திட வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் ஒரு நபர் விசாரணைக்கு குழு அமைத்திட முதல்வர் ஆணையிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com