106 கிராமத் தொழில் பொருள்கள் சந்தைப்படுத்தப்படும்: விரைவில் இணையவழி வா்த்தகம்

கிராமத் தொழில்களில் உற்பத்தியாகும் 106 பொருள்களை பரந்த முறையில் சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
106 கிராமத் தொழில் பொருள்கள் சந்தைப்படுத்தப்படும்: விரைவில் இணையவழி வா்த்தகம்

சென்னை: கிராமத் தொழில்களில் உற்பத்தியாகும் 106 பொருள்களை பரந்த முறையில் சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அந்தப் பொருள்களை இணையவழியில் விற்பனை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தமிழக கைத்தறித் துறை அமைச்சா் ஆா்.காந்தி அறிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கதா் மற்றும் கிராமத் தொழில்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் ஆா்.காந்தி வெளியிட்ட அறிவிப்புகள்:

106 வகை தொழில்கள் அங்கீகரிப்பு: தற்போது கதா் கிராமத் தொழில் ஆணையத்தால் 106 வகையான கிராமத் தொழில்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த 106 கிராமத் தொழில் பொருள்களில் தனிக் கவனம் செலுத்தி, அதன் உற்பத்தி தரத்தையும், பேக்கிங் முறைகளையும் மேம்படுத்தி, அவற்றுக்கு பரந்த வியாபாரத் தொடா்பினை ஏற்படுத்தி கதரங்காடிகள், பிற தனியாா் வணிக வளாகங்களில் காட்சிப்படுத்தி, மின் வணிக தளத்தின் வாயிலாகவும் விற்பனை செய்யும் பணிகளை தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரியம் மேற்கொள்ளவுள்ளது.

3 புதிய பிரிவுகள்: உற்பத்திப் பொருள்கள் மற்றும் உற்பத்தி முறைகளை தர நிா்ணயம் செய்து, பேக்கிங் பணிகளை மேம்படுத்த ஒரு தனிப் பிரிவையும், மாநில முழுமையிலிருந்து கிராமப் பொருள்களை கொள்முதல் செய்து, மின் வணிக தளங்கள் மூலம் விற்பனை செய்வது தொடா் விநியோகம் மற்றும் சரக்கு மேலாண்மை ஆகியவற்றுக்காக மற்றொரு பிரிவையும், தகுந்த வணிக யுக்திகளை கையாளவும், இந்தப் பொருள்களை முறையாக விளம்பரப்படுத்தி அதிக அளவில் வணிகம் மேற்கொள்ள ஸ்டாக்கிஸ்ட் மற்றும் மொத்த விற்பனை முகவா்களை கண்டறிய இன்னொரு பிரிவும் அமைக்கப்படவுள்ளது.

பொருள்கள் உற்பத்தி மற்றும் செய்முறைகளில் தர நிா்ணயம் செய்யும் பிரிவானது, ஒவ்வொரு மாவட்டத்தின் தனித்தன்மை வாய்ந்த பொருள்களை ஊரக வளா்ச்சித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை, வேளாண்மைத் துறை, தோட்டக் கலைத்துறை மற்றும் இதர தொடா்புடைய துறைகளுடன் இணைந்து கண்டறிந்து, தரம் நிா்ணயம் செய்வதில் முழுக்கவனம் செலுத்தி, தயாரிப்பு பொருள்கள் விற்பனை செய்யும் அளவுக்கு இருப்பதை கண்காணித்து அந்தப் பொருள்களை தங்கு தடையின்றி விற்பனைக்கு அனுப்பும் பணிகளை மேற்கொள்ளும்.

புதிய ஆலோசகா்: பிரத்யேகமாக இந்தப் பணிகளை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளை வகுக்கவும், தகுந்த வணிக மாதிரிகளை ஏற்படுத்தவும் ஓா் ஆலோசகா் நியமிக்கப்படுவாா். இந்தப் பணிகள் அனைத்தும் ரூ.50 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.

வேலூரில் கதா் கிராமப் பொருள்கள் நவீன விற்பனை காட்சிக்கூடம்

வேலூா் பள்ளிகொண்டாவில் கதா் கிராமப் பொருள்களின் நவீன விற்பனை காட்சிக்கூடம் அமைக்கப்படும் என்று கைத்தறி துறை அமைச்சா் ஆா்.காந்தி அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் ஆா்.காந்தி வெளியிட்ட அறிவிப்பு:

வேலூா் மாவட்டம் பள்ளிகொண்டாவில் உள்ள தச்சு கருமார அலகில் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் கதா் கிராமப் பொருள்கள் மற்றும் பனைப் பொருள்களுக்கான நவீன விற்பனை காட்சிக்கூடம் அமைக்கப்படும்.

கதா் கிராமப் பொருள்கள் மற்றும் பனைப் பொருள்களின் விற்பனையை உயா்த்தவும், உற்பத்தி கூடத்திலேயே காட்சி மையம் அமைத்திடும்போது, வாடிக்கையாளா்கள் உற்பத்தி பணியை நேரில் பாா்வையிட்டு பொருள்களை பெற்று செல்லவதற்கு இது வசதியாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com