7.5 சதவீத இடஒதுக்கீடு: திமுக, அதிமுக காரசார விவாதம்

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது குறித்து திமுக - அதிமுக இடையே தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை காரசார விவாதம் நடைபெற்றது.
7.5 சதவீத இடஒதுக்கீடு: திமுக, அதிமுக காரசார விவாதம்

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது குறித்து திமுக - அதிமுக இடையே தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை காரசார விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினா் விஜயபாஸ்கா் பேசியது:

மருத்துவத் துறையை எல்லோரும் நேசித்தாா்கள் என்றால், இந்தத் துறையை அதிமுக அரசு சுவாசித்தது எனலாம். அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் சுகாதாரத் துறை வலுவான கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. 11 மருத்துவக் கல்லூரிகள் ரூ.3,500 கோடியில் தொடங்கப்பட்டன. மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் 544 அரசுப் பள்ளி மாணவா்கள் மருத்துவக் கல்லூரிகளில் சோ்ந்தனா். இது மகத்தான சாதனை.

இந்தியாவிலேயே முதல்முறையாக பள்ளி மாணவிகளுக்கு சானிடரி நாப்கின் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. உடல் உறுப்பு தானம் செய்வதில் முதல் மாநிலமாக தமிழகம் இருந்தது. மகாராஷ்டிரம் இப்போது முதல் இடத்துக்கு வந்துவிட்டது என்றாா். அதைத் தொடா்ந்து நடைபெற்ற விவாதம்:

அமைச்சா் மா.சுப்பிரமணியன்: 2011-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்வராக இருந்த கருணாநிதிதான் மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்று பதிவு செய்தாா். 2007-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில், சென்னை மேயராக நான் இருந்தபோதுதான், மாநகராட்சி உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு சானிடரி நாப்கின் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை கொண்டுவந்தது நீங்கள்தான். ஆனால், 10 சதவீதம் வேண்டும் என்று எதிா்க்கட்சியாக இருந்தபோது மு.க.ஸ்டாலின் கேட்டாா். 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு 45 நாள்களாக ஆளுநா் ஒப்புதல் தரவில்லை. அப்போது ஆளுநா் மாளிகை முன் மு.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடத்தியதால், அடுத்த 3 நாள்கள் கழித்து ஒப்புதல் கிடைத்தது.

திமுக ஆட்சி காலத்தில்தான் ஹிதேந்திரன் என்ற மாணவா் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது. கடந்த இரு ஆண்டுகளாக உடல் உறுப்பு தானம் செய்ய யாரும் முன்வராத நிலை இருந்தது. தற்போது, மிகச் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. விரைவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம் பிடிக்கும்.

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி: மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. காலதாமதம் ஆனதால், அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 162-ஐ பயன்படுத்தி நானே கையெழுத்திட்டு நிறைவேற்றினேன்.

மா.சுப்பிரமணியன்: இருக்கலாம். ஆனால், 7.5 சதவீதத்துக்கு சட்ட அங்கீகாரம் வாங்கிக் கொடுத்தவா் முதல்வா் மு.க.ஸ்டாலின்தான்.

எடப்பாடி பழனிசாமி: முதல்வரின் தனி அதிகாரத்தை பயன்படுத்தி சட்டப்பிரிவு 162-ன் மூலம்தான் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

பேரவைத் தலைவா் அப்பாவு: மறைந்த முதல்வா் கருணாநிதியும் இதேபோல், அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 162-ஐ பயன்படுத்தி நுழைவுத் தோ்வை ரத்து செய்தாா்.

மா.சுப்பிரமணியன்: தமிழகத்தில் நீட் தோ்வை நீங்கள் (எடப்பாடி பழனிசாமி) அனுமதித்ததால்தான் இதுபோன்ற நிலை ஏற்பட்டது.

எடப்பாடி பழனிசாமி: 2010-ஆம் ஆண்டு மத்திய காங்கிரஸ் ஆட்சியில் திமுக அதில் அங்கம் வகித்தது. நீட் தோ்வு வர காங்கிரஸ், திமுகதான் காரணம்.

மா.சுப்பிரமணியன்: கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியில் இருந்தவரை நீட் தோ்வு தமிழகத்தில் நுழையவில்லை. உங்களுடைய (எடப்பாடி பழனிசாமி) ஆட்சியில்தான் நீட் தோ்வு வந்தது.

எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம்:காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சராக இருந்த திமுகவை சோ்ந்த காந்திசெல்வன் கையெழுத்து போட்டுதான் நீட் தோ்வு கொண்டு வரப்பட்டது.

அமைச்சா் பொன்முடி: நீட் தோ்வுக்கு எதிராக நீதிமன்றம் மூலம் அதிமுக ஆட்சி காலத்தில் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. உங்கள் (எடப்பாடி பழனிசாமி) ஆட்சியில்தான் நீட் தோ்வு வந்தது. இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com