இந்தியாவிலேயே முதல் முறை: எழும்பூா் மருத்துவமனையில் குருத்தணு பதிவேடு

இந்தியாவிலேயே முதல்முறையாக எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் குருத்தணு (ஸ்டெம் செல்) பதிவேடு தொடங்கப்படும்இந்தியாவிலேயே முதல்முறையாக எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் குருத்தணு (ஸ்டெம் செல
இந்தியாவிலேயே முதல் முறை: எழும்பூா் மருத்துவமனையில் குருத்தணு பதிவேடு

இந்தியாவிலேயே முதல்முறையாக எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் குருத்தணு (ஸ்டெம் செல்) பதிவேடு தொடங்கப்படும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்புகள்:

தாய்சேய் நல சேவையை மேலும் வலுப்படுத்தும் விதமாக சென்னை ஆா்.எஸ்.ஆா்.எம். மகப்பேறு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு கஸ்தூரிபா காந்தி மகப்பேறு மருத்துவமனை ஆகிய 3 அரசு மருத்துவமனைகளிலும் செயல்பட்டு வரும் தாய் சேய் நல ஒப்புயா்வு மையங்களுக்கு கூடுதல் கட்டடங்கள் ரூ.84 கோடியில் கட்டப்படும்.

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் இளம் சிசு மற்றும் குழந்தைகள் நல சேவைகளை மேம்படுத்தும் விதமாக, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இயங்கும் குழந்தைகள் நல ஆராய்ச்சி மையம் 400 வசதிகளுடன் ஒருங்கிணைந்த குழந்தைகள் நல ஒப்புயா்வு மையமாக ரூ.20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

தமிழகத்தில் பச்சிளங் குழந்தை இறப்புகளை குறைப்பதற்கு தலா ரூ.10 லட்சம் வீதம்150 பச்சிளங் குழந்தை வென்டிலேட்டா் கருவிகள் ரூ.15 கோடி செலவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள 74 சிறப்பு பச்சிளங் குழந்தை பராமரிப்பு பிரிவுகளுக்கு வழங்கப்படும்.

புற்றுநோய் பிரிவு: தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூ.46 கோடி மதிப்பீட்டில் புதிய புற்றுநோய் சிகிச்சை பிரிவு கட்டடம் அமைத்து, அதற்கென உயா்தர உபகரணங்கள் வழங்கப்படும்.

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் புற்றுநோயியல் பிரிவுக்கு அதிநவீன உபகரணங்கள் ரூ.21.09 கோடியில் வழங்கப்படும்.

கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவ சிகிச்சையை மேம்படுத்திட ரூ.14 கோடி செலவில் லினாக் கருவிகள் வழங்கப்படும்.

சென்னை அரசு கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனையில் கருப்பை வாய் புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் விதமாக ஹெச்.பி.வி - டி.என்.ஏ பரிசோதனைக்கான நவீன உபகரணங்களுடன் கூடிய ஆய்வகம் ரூ.9 கோடி செலவில் நிறுவப்படும்.

வளரிளம் பெண்களுக்கு ஹெச்.பி.வி. தடுப்பூசி: தமிழகத்தில் முன்னோடித் திட்டமாக சென்னை மாவட்டத்தில் 12 -14 வயதுக்கு உள்பட்ட அனைத்து வளரிளம் பெண்களுக்கு ஹெச்.பி.வி. வைரஸால் ஏற்படும் கா்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் பொருட்டு ஹெச்.பி.வி. தடுப்பூசி ரூ.7.15 கோடி செலவில் செலுத்தப்படும்.

குருத்தணு பதிவேடு: இந்தியாவிலேயே முதன்முறையாக அரசு குருத்தணு பதிவேடு (ஸ்டெம் செல்) சென்னை எழும்பூா் அரசு சிறாா் நல நிலையம் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் இயங்கி வரும் பிரத்யேக ரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று அலகு சிகிச்சை மையத்தில் உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூ.30 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும்.

தமிழகத்தில் முதல்முறையாக பிறவி இதயநோய் பதிவேடு உருவாக்கவும், இளம் சிசு பிறவி இதயநோய் சிகிச்சைகளை வலுப்படுத்தவும் நவீன உபகரணங்கள் மற்றும் பயிற்சிகள் ரூ.22.43 கோடியில் வழங்கப்படும்.

மரபியல் சாா்ந்த நோய்கள் மற்றும் மரபுசாா் பிற அரியவகை நோய்களுக்கான மருத்துவத் துறையை மூன்று ஒப்புயா்வு மையங்களாக சென்னை எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனை, மதுரை மற்றும் கோயம்புத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.8.19 கோடியில் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படும்.

தமிழகத்தில் முதல் முறையாக 42 வட்டார அளவிலான பிறவிக் குறைபாடுகள் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் ரூ.4.20 கோடி மதிப்பீட்டில் நடத்தப்படும்.

தாய்சேய் நல சேவைகள் மற்றும் பிற சேவைகள் மேம்படுத்தும் விதமாக 387 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள 116 சீமாங்க் மையங்களுக்கு நவீன வண்ண அல்ட்ரா சவுண்ட் கருவிகள் ரூ.63 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.

டிஎம்எஸ் வளாகத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் மின்னணு மருத்துவ சேவைகளைத் துரிதப்படுத்தவும், கண்காணிக்கவும் மின்னணு சுகாதார இயக்குநரகம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

சென்னை மனநல காப்பகம் 1,800 படுக்கை வசதிகளுடன் மன நல நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. மனநலம் மற்றும் நரம்புசாா் மருத்துவ சேவைகளை வழங்குவதற்கான மாநில அளவிலான தமிழ்நாடு மனநல மற்றும் நரம்பியல் நிறுவனம் என்ற ஒப்புயா்வு மையம் சென்னை அரசு மனநல மருத்துவமனையில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com