கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனை எந்த வார்டில் உள்ளது: உறுப்பினர்களிடையே வாக்கு வாதம்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனை எந்த வார்டில் உள்ளது என, நகர மன்ற உறுப்பினர்களிடையே, கடும் வாக்கு வாதம் நடைபெற்றது.
நகர வரைப்படத்தை, அவைக் கூடத்திற்குள் கொண்டு வந்து பார்வையிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவர் மு.பாத்திமா பஷீரா.
நகர வரைப்படத்தை, அவைக் கூடத்திற்குள் கொண்டு வந்து பார்வையிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவர் மு.பாத்திமா பஷீரா.

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனை எந்த வார்டில் உள்ளது என, நகர மன்ற உறுப்பினர்களிடையே, கடும் வாக்கு வாதம் நடைபெற்றது.

கூத்தாநல்லூர் நகர மன்றத்தின் சாதாரணக் கூட்டம் நகராட்சி அலுவலக அவைக் கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் மு.பாத்திமா பஷீரா தலைமை வகித்தார். துணைத் தலைவர் மு.சுதர்ஸன் முன்னிலை வகித்தார். 

கூட்டத்தில், உறுப்பினர்களிடைய நடந்த விவாதம்: 
நகராட்சி எல்லைக்குள்பட்ட 24 வார்டுகளிலும் திடக்கழிவு மேலாண்மை பணியின் கீழ் தினமும் தூய்மைப் பணிகள் மேற்கொள்வதற்கு தேவையான ப்ளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு உள்ளிட்டவைகளுக்கான செலவினங்களுக்கு ரூ.8 லட்சத்திற்கு மன்றத்தின் அனுமதி குறித்து வாசிக்கப்பட்டது. அப்போது,

செ.முஹம்மது அபுபக்கர் சித்திக் (திமுக ): 2022- 23 ஆம் ஆண்டுக்கு எவ்வளவு ரூபாய்க்கு வாங்கியுள்ளீர்கள்.

கி.அருண்குமார் (ஆய்வாளர்): ரூ.8 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளது.

துணைத் தலைவர்: நகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் 71 பேர் பணியாற்றுகிறார்களா?, 71 பேரும் கையெழுத்து போடுகிறார்களா?, பார்க்கலாமா?, அவர்களுக்கு ஓராண்டுக்கு ரூ.75 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறதா? மிகவும் அதிகமாக உள்ளது.

கி.அருண்குமார் (ஆய்வாளர்): இன்னும் 20 பேர் தேவைப்படுகிறார்கள்.

க.தேவேந்திரன் (திமுக): மரக்கடையில் உள்ள வாய்க்காலை சுத்தம் செய்வது குறித்து அஜந்தாவில் சேர்க்கப்படவில்லையே.

கி.அருண்குமார் (ஆய்வாளர்): அஜந்தாவில் பொதுவாகத்தான் வைக்கப்பட்டுள்ளது. சேர்க்கப்படும்.

ச.கஸ்தூரி (திமுக): நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. மேலும், அந்த நாய்களுக்கு தோல் வியாதி போலவும் உள்ளன.

தாஹிரா சமீர் (காங்கிரஸ்): நாய்களுக்கு ஊசிப் போட்ட பிறகு, மறுபடியும் இங்கேயே கொண்டு வந்து விட்டு விடுகிறார்கள்.

பொ.பக்கிரிச்செல்வம் (திமுக): நகரம் முழுவதும் ஆயிரக்கணக்கான நாய்கள் உள்ளன.

செ.ஹாஜா நஜ்முதீன் ( திமுக):  புதுசு, புதுசா, கலர், கலரா நாய்கள் வருகிறது.

செ. முஹம்மது அபுபக்கர் சித்திக் (திமுக): கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனை எந்த வார்டில் உள்ளது. 7 -ஆவது வார்டில் உள்ளதா, எனது 9 -ஆவது வார்டில் உள்ளதா, தெரியப்படுத்தவும்.

பொ. பக்கிரிச்செல்வம் (திமுக): அரசு மருத்துவமனை என்னுடைய வார்டான 7 -ஆவது வார்டில்தான் உள்ளது.

அதைத் தொடர்ந்து, நகர வரைப்படத்தை, அவைக் கூடத்திற்குள் கொண்டு வந்து பார்வையிட்டனர்.

தலைவர்: அரசு மருத்துவமனை 7 -ஆவது வார்டில்தான் உள்ளது.

செ.ஹாஜா நஜ்முதீன் (திமுக): புதிதாகத் திறக்கப்பட்டுள்ள ஆட்டிறைச்சிக் கூடத்தில், ஆடுகள் அறுக்கும் போது, அந்த இடத்தில் கால்நடை மருத்துவர் இருந்து, ஆடுகளை பரிசோதிக்க வேண்டும்.

கி.மாரியப்பன் (திமுக): உத்திராபதீஸ்வரர் அமுது படையல் திருவிழாவுக்கு, நகராட்சி சார்பில் பாதுக்காப்பு ஏற்பாடுகளை வழங்க வேண்டும்.

அ.சொற்கோ (அதிமுக): தென்றல் நகரில் தார்ச்சாலை அமைக்கப்பட வேண்டும்.

ரா.புரோஜீதீன் (திமுக): நகர மன்ற அவைக் கூடத்தில், உறுப்பினர்களுக்கு முன்பு பெயர் பலகை வைக்கப்பட வேண்டும்.

க.துரைமுருகன் (திமுக): பூதமங்கலம் முதல் கீழப்பனங்காட்டாங்குடி வரையிலான திருவாரூர் பிரதான சாலையில், இருபுறமும் மின்சார விளக்கு அமைக்கப்பட வேண்டும்.

கு.தனலெஷ்மி (இ.கம்யூ.): குடிசைப் பகுதியான எனது வார்டில் வீட்டு வரியை குறைக்க வேண்டும். 8 குடிநீர் பம்புகளை சரி செய்ய வேண்டும்.

தாஹிரா சமீர் (காங்கிரஸ்): கமாலியாத் தெரு, ரஹ்மானியாத் தெரு ஆகிய தெருக்களில் கால்வாய்களை சுத்தம் செய்ய வேண்டும்.

துணைத் தலைவர்: இரண்டாம் தர நகராட்சியான கூத்தாநல்லூர் நகராட்சியில், பாதாளச் சாக்கடை அமைக்கப்படும் திட்டம் உள்ளதா. நகரத்தில் 14 அங்கன்வாடிகள் உள்ளன. சொந்தக் கட்டடம் இல்லாத இடங்களுக்கு சொந்தக் கட்டடம் அமைக்கப்பட வேண்டும். மேல் கொண்டாழியில், அங்கன்வாடி கட்டடம் கட்டுவதற்கு, எனது சொந்த இடத்தில் 5 குழி இடம் தருகிறேன்.

ராஜகோபால் (பொறியாளர்): பாதாளச் சாக்கடைத் திட்டம் என்பது மக்கள் தொகையின் கணக்கின்படிதான் அமைக்கப்படும்.

கி.மாரியப்பன் (திமுக): பழைய நகராட்சி கட்டடம் அருகேயுள்ள, மேல்நிலை குடிநீர் தொட்டி மிகவும் பழுதடைந்து, சிமிண்ட் காரைகள் பெயர்ந்து, இரும்புக் கம்பிகள் வெளியில் தெரிகிறது. மேல் நிலை குடிநீர் தொட்டியில், திடீர் என ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், நகர மக்கள் குடி தண்ணீருக்கு பெரும் கஷ்டம் ஏற்படும். அதற்கு முன்பே, வேறு இடத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் தொட்டி அமைக்கப்பட வேண்டும்.

ராஜகோபால் (பொறியாளர்): கூத்தாநல்லூர் நகராட்சியில் 24 மணி நேரமும் குடிதண்ணீர் கிடைக்கும் திட்டத்தைக் கொண்டு வரப்பட உள்ளது என்றார். 

இதேபோல், கூட்டத்தில், உறுப்பினர்கள் ச.ஜெய் புன்னிஸா, கோ.சாந்தி, மு.சப்ரினா பர்வீன், மு.பிரவீனா, அ. மும்தாஜ் பேகம், ஜ.ப.தாஹிரா தஸ்லிமா பேகம், சண்முகம் உள்ளிட்ட உறுப்பினர்கள் தங்களது வார்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினர். நிறைவாக, தஞ்சை தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com