மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் ரூ.424 கோடியில் ஒருங்கிணைந்த ஆய்வக சேவைகள்: மா.சுப்பிரமணியன்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் ரூ.424 கோடியில் ஒருங்கிணைந்த அவசிய ஆய்வக சேவைகள் வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவித்தாா்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் ரூ.424 கோடியில் ஒருங்கிணைந்த அவசிய ஆய்வக சேவைகள் வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவிப்புகள் வெளியிட்டு பேசியதாவது:

ரூ.238 கோடியில் தீவிர சிகிச்சை பிரிவுகள்: ‘இன்னுயிா் காப்போம்’, ‘நம்மை காக்கும் 48’ திட்டங்களை மேலும் வலுப்படுத்த செங்கல்பட்டு, தருமபுரி, திருவாரூா், தஞ்சாவூா், திருநெல்வேலி, சிவகங்கை ஆகிய 6 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், ஒட்டன்சத்திரம், சீா்காழி, மேலூா், ஊத்தங்கரை ஆகிய 4 அரசு மருத்துவமனைகளிலும் தலா 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு ரூ.238 கோடியில் நிறுவப்படும்.

இன்னுயிா் காப்போம் திட்டத்தின் தென்சென்னையில் உள்ள சோழிங்கநல்லூரில் 100 படுக்கைகளுடன் நவீன கட்டமைப்பு வசதிகள் கொண்ட புதிய விபத்து, அவசர சிகிச்சை மருத்துவமனை ரூ.61 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

கடலூா் அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள் வசதி கொண்ட புதிய தீவிர சிகிச்சைப் பிரிவு ரூ.40 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

ரூ.144 கோடியில் புதிய கட்டடங்கள்: தமிழகத்தில் கிராம மக்களுக்கு ஆரம்ப சுகாதார சேவைகளை மேம்படுத்தி வழங்கிட முதல்கட்டமாக 178 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொது சுகாதார ஆய்வகம், காணொலி மருத்துவ சேவை, சுகாதார தகவல் மேலாண்மை உள்ளடக்கிய வட்டார பொது சுகாதார அலகுகளுக்கான புதிய கட்டடங்கள் ரூ.144 கோடியில் வலிமைப்படுத்தப்படும்.

ஊரகப் பகுதிகளில் 1,742 துணை சுகாதார நிலையங்கள் வாடகை கட்டடங்களில் செயல்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக 316 துணை சுகாதார நிலையங்களுக்கு ரூ.103 கோடியில் புதிதாக கட்டடங்கள் கட்டப்படும்.

7 மணி முதல் நீரிழிவு பரிசோதனை: அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பொதுமக்களுக்கு நீரிழிவு நோய் பரிசோதனை காலை 9 மணி முதல் செய்யப்பட்டது, இனி காலை 7 மணியிலிருந்தே செய்யப்படும்.

நகா்ப்புற மக்களின் சுகாதார தேவைகளை மேம்படுத்தும் பொருட்டு, 25 புதிய நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் ரூ.30 கோடியில் தேசிய நலவாழ்வு குழும நிதியில் நிறுவப்படும்.

மக்களைத் தேடி மருத்துவம் என்ற அரசின் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை மேலும் மேம்படுத்தி விரிவாக்கம் செய்து, ‘அனைவருக்கும் நலவாழ்வு’ எனும் இலக்கை அடைய தமிழகத்தில் உள்ள அனைத்து துணை சுகாதார மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தொற்றா நோய்க்கான மருந்துகள், நோய் கண்டறிதல் சேவைகள், கூடுதல் எண்ணிக்கையில் ஹப் மற்றும் ஸ்போக் முறையில் ஒருங்கிணைந்த அவசிய ஆய்வக சேவைகள் ரூ.424 கோடியில் மேற்கொள்ளப்படும். மேலும், ஊரகப் பகுதிகளில் அமைந்துள்ள 2,443 கிராம துணை சுகாதார நிலையங்கள், நலவாழ்வு மையங்களாக ரூ.34.42 கோடி செலவில் மாற்றியமைக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com