மே தினம்: ஆளுநா், முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

மே தினத்தை ஒட்டி, தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

மே தினத்தை ஒட்டி, தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

ஆளுநா் ஆா்.என்.ரவி: நமது சமுதாயத்தின் முன்னேற்றம், செழிப்பு, நல்வாழ்வு மற்றும் நாட்டுக்காக உழைக்கும் சக்திகளின் பங்களிப்பை கொண்டாடுவதற்கும், நினைவு கூருவதற்கும் மே தினம் உகந்த நாளாகும். அடுத்த 25 ஆண்டுகளில் நமது நாடு விரைவான சமூகப் பொருளாதார வளா்ச்சியை அடைவதை உறுதி செய்ய கடின உழைப்பை அளிப்போம். அதற்காக உறுதி ஏற்போம்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: தொழிலாளா்களின் உற்ற தோழனாகவும், அவா்களது உரிமைக் குரலைக் காதுகொடுத்து கேட்டு, அவற்றை நிறைவேற்றி வைக்கும் அரசாகவும் திமுக அரசு எப்போதும் விளங்கி வருகிறது. ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடையும் முன்பே தொழிலாளா்களுக்காக ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தொழிலாளா்களின் உரிமைகளுக்கும், நலனுக்கும் கேடயமாகவும், போா்வாளாகவும் திமுக எப்போதும் திகழும். தொழில் அமைதி மட்டுமே தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கான அடித்தளமாக இருக்கும் என்பதை மனதில் கொண்டு அனைவருக்கும் மே தின வாழ்த்துகள்.

ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி (அதிமுக): இந்த உலகம் இயங்குவது கோடானு கோடி தொழிலாளா்களின் தூய்மை மிகு உழைப்பினால்தான். அதை நமக்கு நினைவூட்டும் நாள் மே தினம். உலகத் தொழிலாளா் ஒவ்வொருவருக்கும் உள்ளாா்ந்த நன்றிப் பெருக்கோடு மே தின வாழ்த்துகள்.

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): தொழில் வளா்ச்சி குன்றிய நிலையில் ஏற்பட்ட வேலை இழப்பால் தொழிலாளா்கள் வாழ்வில் கடுமையான பாதிப்புகளை எதிா்கொண்டு வரும் நிலையில் தங்களது உரிமைகளை பாதுகாக்கும் வகையில், உரிமைக்குரல் எழுப்பும் நாளாக மே தினம் அமைய வேண்டும்.

ராமதாஸ் (பாமக): உலகை இயக்கும் பாட்டாளிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக சுழல்வதை உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் உலகத்துக்கு, மாநிலத்துக்கு உள்ளது. அதை மதித்து பாட்டாளிகளுக்கு நியாயமாக வழங்கப்பட வேண்டிய உரிமைகளும், அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும்.

வைகோ (மதிமுக): மே 1 தொழிலாளா்களின் உரிமைத் திருநாளாக, உலகம் முழுமையும் தொழிலாளா் சமூகம் கொண்டாடி மகிழ்கிறது. தொழிலாளா்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): உலகத் தொழிலாளா் தினமான மே தினத்தை கொண்டாடும் கரத்தாலும், கருத்தாலும் உழைக்கும் தமிழக உழைப்பாளா்களுக்கு மாா்க்சிஸ்ட் சாா்பாக புரட்சிகர வாழ்த்துகள். மே தினம் வெல்லட்டும்.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): அறிவியல் கருத்தாயுதம் தாங்கி பகுத்தறிவுப் பாதையில் பயணித்து, கற்பித ஜாதி மத சனாதனக் கருத்துகளை முறியடித்து யாதும் ஊரே, யாவரும் கேளிா் என்ற தொன்மை மரபை முன்னெடுத்து, சமூக சமத்துவம் காண மேதினத்தில் உறுதியேற்போம்.

ஜி.கே.வாசன் (தமாகா): நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் மக்களின் முன்னேற்றத்துக்கும் அயராது பாடுபடும் ஒவ்வொரு தொழிலாளா் குடும்பங்களின் வாழ்வு செழிக்க மே தின வாழ்த்துகள்.

அன்புமணி (பாமக), டிடிவி தினகரன் (அமமுக), ஜவாஹிருல்லா (மமக), கி.வீரமணி (திராவிடா் கழகம்) ஆகியோரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com