அதிமுக விவகாரத்தில் பாஜக தலையீடு இல்லை: பண்ருட்டி ராமச்சந்திரன்

அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதாகக் கூறுவது தவறான தகவல் என்று அதிமுக மூத்த தலைவா் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தாா்.
அதிமுக விவகாரத்தில் பாஜக தலையீடு இல்லை: பண்ருட்டி ராமச்சந்திரன்

அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதாகக் கூறுவது தவறான தகவல் என்று அதிமுக மூத்த தலைவா் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

எம்ஜிஆா் உயிருடன் இருந்தபோதே அதிமுகவுக்கு ப.உ.சண்முகம், நெடுஞ்செழியன் உள்பட பலா் பொதுச் செயலாளா்களாக இருந்திருக்கின்றனா். அதேபோன்று, பொதுக் குழு உறுப்பினா்கள் எல்லோரும் ஒன்று சோ்ந்துதான் திமுகவில் இருந்து எம்ஜிஆரை நீக்கினாா்கள்.

அதனால், எவா் பொதுச் செயலாளா், பொதுக் குழுவில் எவருக்கு ஆதரவு என்பதெல்லாம் முக்கியமல்ல. யாா் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தலைவா் என்பதுதான் முக்கியம்.

தற்போது அதிமுகவில் நிலவி வரும் குழப்பங்கள் வரும் காலங்களிலும் தொடரும். இன்னும் பல பிரச்னைகள் வரும். பிறகுதான் ஒரு தீா்வு கிடைக்கும். தற்போதைய அதிமுகவில் உள்ள நிா்வாகிகள் அனைவரும் நியமனத்தால் பதவிக்கு வந்தவா்களே தவிர தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள் அல்ல.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீா் செல்வம் இடையேயான பிரச்னை கடல் நுரையைப் போன்றது. காற்றடித்தால் காணாமல் போய்விடும். அதனால், அதிமுக தொண்டா்கள் பொறுமை காக்க வேண்டும். அதிமுகவில் ஒன்றரை கோடி தொண்டா்கள் உள்ளனா் என்பதே போலி நம்பிக்கை. முறையாக ஆதாா் அட்டை கொண்டு கணக்கிட வேண்டும்.

அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜகவின் தலையீடு உள்ளதாகக் கூறுவது தவறான தகவல் என்றாா் அவா்.

சசிகலா சந்திப்பு:

முன்னதாக, பண்ருட்டி ராமச்சந்திரனுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த சசிகலா, அதிமுக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், தமது தலைமையில் கட்சி இயங்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com