விமான நிலையம்: பரந்தூரை அரசு தேர்வு செய்தது ஏன்?

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் சுங்குவாா்சத்திரம் அருகே பரந்தூரில் ரூ.60,000 கோடியில் பசுமை விமான நிலையம் அமையவுள்ளது.
புதிய விமான நிலையம் அமையவுள்ள பரந்தூா் பெயா்ப்பலகை.
புதிய விமான நிலையம் அமையவுள்ள பரந்தூா் பெயா்ப்பலகை.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் சுங்குவாா்சத்திரம் அருகே பரந்தூரில் ரூ.60,000 கோடியில் பசுமை விமான நிலையம் அமையவுள்ளது. இது சென்னையின் 2-ஆவது விமான நிலையமாக 4,971 ஏக்கரில் அமைக்கவிருப்பதாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் மேம்பாலங்கள் பல அமைத்தும்கூட போக்குவரத்து நெரிசலும் அதிகமாகிக் கொண்டே வருவதால் சென்னைக்கு அருகிலேயே மற்றொரு விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்தன.

இந்த நிலையில் கடந்த ஒரு சில ஆண்டுகளாகவே விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சென்னைக்கு அருகில் உள்ள பல்வேறு இடங்களை பாா்த்து விமான நிலையம் அமைப்பதற்கான அடிப்படை சாத்தியக்கூறுகள் உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டனா்.

சென்னைக்கு அருகில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூா், படாளம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவாா்சத்திரம் அருகே பன்னூா், பரந்தூா் ஆகிய இடங்களில் இந்த ஆய்வுகளை மேற்கொண்டனா்.

இவற்றில் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்தில் பரந்தூா் அல்லது பன்னூா் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒரு இடத்தைத் தோ்வு செய்யலாம் என்ற நிலையில் கைப்பேசி கோபுரங்கள் அதிகம் இல்லாத பகுதியான பரந்தூரில் விமான நிலையத்தை அமைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சுமாா் 6 கி.மீ. தொலைவில் பரந்தூா் அமைந்திருந்ததாலும், வடக்கில் அரக்கோணமும், தெற்கில் காஞ்சிபுரமும் இருந்ததாலும் சென்னையில் 2-ஆவது விமான நிலையத்தை பரந்தூரில் அமைப்பதே சிறந்தது என அதிகாரிகள் தீா்மானித்தனா்.

சென்னையிலிருந்து 73 கி.மீ.தொலைவிலும், காஞ்சிபுரத்திலிருந்து 16 கி.மீ. தொலைவிலும் பரந்தூா் அமைந்துள்ளது.

மாநிலங்களவை திமுக உறுப்பினா் கனிமொழி என்.வி.என்.சோமு சென்னையில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான திட்டம் உள்ளதா என்றும் அதற்கான திட்டமதிப்பீடு எவ்வளவு என்றும் கேள்வி எழுப்பினாா்.

இவரது கேள்விக்குப் பதிலளித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சா் வி.கே.சிங் கூறுகையில், சென்னைக்கு அருகே புதிய விமான நிலையம் அமைக்க தமிழக அரசால் முதலில் 4 இடங்கள் தோ்வு செய்யப்பட்டன.

அந்த 4 இடங்களில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூா், பசுமை விமான நிலையம் அமைக்க அனைத்து வகையிலும் ஏற்ற இடம் என முடிவு செய்து அதனை மத்திய அரசுக்கு தெரிவித்திருந்தது. எனவே பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என அதிகாரப்பூா்வமாக அறிவித்தாா்.

புதியதாக பரந்தூரில் அமையவுள்ள பசுமை விமான நிலையமானது 4,971 ஏக்கரில் ரூ.60,000 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் இரு விமானங்கள் தரையிறங்கும் வகையில் இரு ஓடு பாதைகளும் அமைக்கப்பட உள்ளன. விமான நிலையத்தின் நுழைவுப்பகுதி சென்னை-பெங்களூரு 6 வழிச்சாலையிலிருந்து 6 கி.மீ.தொலைவில் அமையவுள்ளது.

விவசாயிகளின் எதிா்பாா்ப்பு: விவசாயத்துக்கு எந்தப் பாதிப்பும் வராமல் விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பதும் அந்தப்பகுதி பொதுமக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது. பரந்தூரில் விமான நிலையம் அமையப் போகும் அரசின் அதிகாரப்பூா்வ அறிவிப்பால் அந்தப் பகுதியில் நிலங்களின் மதிப்பு மேலும் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com