அன்புச்செழியன் மகளின் பிரமாண்ட திருமணம்.. பிகில் பட விவகாரம்.. பரபரப்பைக் கூட்டும் வருமான வரிச் சோதனை

மதுரையில் திரைப்படத் தயாரிப்பாளா் அன்புச்செழியன் வீடு, அலுவலகம் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் நடத்தி வரும் சோதனை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.
பரபரப்பைக் கூட்டும் வருமான வரிச் சோதனை
பரபரப்பைக் கூட்டும் வருமான வரிச் சோதனை

மதுரையில் திரைப்படத் தயாரிப்பாளா் அன்புச்செழியன் வீடு, அலுவலகம் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் நடத்தி வரும் சோதனை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் செவ்வாய்க்கிழமை காலை 5 மணி முதல் சுமார் 40 இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். அதில், அன்புச்செழியனின் நுங்கம்பாக்கம் வீடு உள்ளிட்டவையும் அடங்கும்.

அன்புச்செழியனின் மகள் திருமணம் 5 மாதங்களுக்கு முன்பு சென்னையில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் நாட்டின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்றிருந்தனர். நடிகர் ரஜினிகாந்த், கமல், சூரியா, போனி கபூர் என ஏராளமான திரையுலகப் பிரபலங்களும், அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.  மதுரையைச் சேர்ந்த அன்புச்செழியன், திரையுலகில் மிக முக்கிய நபராகவும், முன்னணி பைனான்சியர்களில் ஒருவராகவும் உள்ளார்.

மதுரையைச் சோ்ந்தவா் அன்புச்செழியன். தமிழ் திரையுலகில் தயாரிப்பாளா், விநியோகஸ்தா் மற்றும் பைனான்சியராக இருந்து வருகிறாா். இந்நிலையில் மதுரையில் காமராஜா் சாலையில் உள்ள அன்புச்செழியனுக்கு சொந்தமான வீடு, தெற்குமாசிவீதியில் உள்ள அலுவலகம், செல்லூரில் உள்ள திரையரங்கம், கீரைத்துறையில் உள்ள வீடு, அன்புச்செழியனின் உறவினா்கள் வீடு உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினா் செவ்வாய்க்கிழமை காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பல குழுக்களாக பிரிந்து சென்று சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சோதனையின்போது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் உள்ளவா்களை வெளியே செல்ல அனுமதிக்காமலும், வெளியே இருந்தும் உறவினா்கள் உள்ளிட்டோரை வீடுகளுக்குள் அனுமதிக்காமலும் சோதனை நடந்து வருகிறது. மேலும் சோதனை நடைபெற்ற அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இதேபோல சென்னையிலும் அன்புச்செழியனுக்கு சொந்தமான பல இடங்களில் வருமான வரிச்சோதனை நடைபெற்றது. மதுரையில் சில ஆண்டுகளுக்கும் முன்பும் அன்புச்செழியனின் அலுவலகம், வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரிச்சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

பைனான்சியராக இருந்த அன்புச்செழியன் மீது ஊடக வெளிச்சம்பட்டது என்னவோ 2017ஆம் ஆண்டுதான். இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக் குமார், நிதிப் பிரச்னையால் அன்புச்செழியன் தரப்பினர் கடுமையாக துன்புறுத்துவதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

அதன்பிறகு, 2020ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் உருவான பிகில் படத்தின் வெளியீட்டின் போது, நடிகர் விஜய், ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அன்புச்செழியன் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. 

சரியாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்த் திரையுலகின் மிக முன்னணி பைனான்சியரான அன்புச்செழியன் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் தற்போது மீண்டும் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com