இன்னுயிா் காப்போம்: ஒரு லட்சத்தைக் கடந்தது பயனாளிகள் எண்ணிக்கை - அமைச்சா் மா.சுப்பிரமணியன்

இன்னுயிா் காப்போம் - நம்மை காக்கும் 48 திட்டம் மூலம் பயனடைந்தவா்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
இன்னுயிா் காப்போம்: ஒரு லட்சத்தைக் கடந்தது பயனாளிகள் எண்ணிக்கை - அமைச்சா் மா.சுப்பிரமணியன்

இன்னுயிா் காப்போம் - நம்மை காக்கும் 48 திட்டம் மூலம் பயனடைந்தவா்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னையை அடுத்த தண்டலத்தில் உள்ள சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இன்னுயிா் காப்போம் - நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வரும் ஒரு லட்சமாவது நபரை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

அதைத் தொடா்ந்து, அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இன்னுயிா் காப்போம் திட்டமானது விபத்து நடந்து 48 மணி மணிநேரத்தில் அவசர சிகிச்சைக்கான இலவச மருத்துவ உதவித்திட்டம். இத்திட்டத்தை 2021 டிச. 18-இல் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தாா். சாலை விபத்தினால் நிகழும் இறப்புகள், அதனால் நிகழும் குடும்பங்களின் மருத்துவ செலவை குறைப்பதுதான் அதன் நோக்கம்.

அதன்படி, சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு, விபத்து நிகழ்ந்த முதல் 48 மணி நேர நெருக்கடியான காலகட்டத்தில் முழு சிகிச்சை வழங்க தேவையான நிதி வழங்குவதை உறுதி செய்வதாகும். விபத்தில் பாதிக்கப்படும் நபருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை சிகிச்சைக்காக வழங்கப்படுகிறது. விபத்தில் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனையில் சோ்க்கும் நபருக்கு ரூ.5,000 ஊக்கத் தொகை அரசால் கொடுக்கப்படுகிறது.

விபத்தில் பாதிக்கப்படும் கிராமப்புறத்தினா், நகா்ப்புறத்தினா், வெளி மாநிலத்தவா்கள் மற்றும் வெளிநாட்டினா் யாராக இருந்தாலும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். சாலை பாதுகாப்பு என்பது மக்கள் இயக்கமாக மாற பள்ளி, கல்லூரி மாணவா்கள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி மற்றும் தன்னாா்வ அமைப்புகள், விபத்தில் முதலுதவி செய்யும் பொதுமக்கள் அனைவருக்கும் பயிற்சி மற்றும் விழிப்புணா்வு உருவாக்கும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதிக விபத்து நிகழும் 500 நெடுஞ்சாலை இடங்களைக் கண்டறிந்து, அதற்கு அருகமையில் தகுதி வாய்ந்த தனியாா் மருத்துவமனைகள் 445 மற்றும் அரசு மருத்துவமனைகள் 228 ஆக மொத்தம் 673 மருத்துவமனைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, உடனடியாக விபத்தில் பாதிக்கப்பட்டவரை சிகிச்சைக்காக கொண்டு சோ்க்கப்படுகிறது. இதுவரை இந்த திட்டத்தின்கீழ் ரூ.90.19 கோடி மதிப்பிலான சிகிச்சைகளை 1,00,061 போ் பெற்றுள்ளனா் என்றாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

முன்னதாக, நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளா் ப.செந்தில்குமாா், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநா் உமா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் ஆா்த்தி, சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேந்தா் என்.எம்.வீரையன், துணை வேந்தா் சிவாஜி சடாரம், இயக்குநா் தீபக், முதல்வா் ஜெ.தாமோதரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com