காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு: 300-க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தஞ்சம்

பவானியில் காவிரி கரையோரப் பகுதிகளில் 100 குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால்,  300-க்கும் மேற்பட்டோர் உடமைகளுடன் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு: 300-க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தஞ்சம்

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2.10 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் பவானியில் காவிரி கரையோரப் பகுதிகளில் 100 குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்தது. இதனால், 300-க்கும் மேற்பட்டோர் உடமைகளுடன் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், காவிரி கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு பொதுமக்கள் மேலான பகுதிகளுக்கு செல்லுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வந்தனர். 

மேட்டூர் அணைக்கு வந்த உபரி நீர் வினாடிக்கு 1.75 லட்சம் கன அடி தண்ணீர் புதன்கிழமை இரவு வெளியேற்றப்பட்டது. வெளியேற்றப்பட்ட தண்ணீர் பவானி பகுதிக்கு வியாழக்கிழமை காலை வந்தடைந்த போது நீர்மட்டம் அதிகரித்ததால் கரையோர பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்தது. 

பவானி நகரில் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள கந்தன் நகர், காவேரி நகர், பசுவேஸ்வரர் வீதி,  பழைய பாலம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் புகுந்த வீடுகளில் இருந்து, உடைமைகளுடன் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு மேடான பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

கரையோரப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பொதுமக்கள் ஆற்றங்கரைக்கு செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை காலை வினாடிக்கு 2.10 லட்சம் கன அடி தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டது. கூடுதலாக வெள்ள நீர் வருவதால் கரையோர பகுதிகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பவானி வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன், பவானி நகராட்சி ஆணையாளர் தாமரை மற்றும் அதிகாரிகள் கரையோரப் பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பழைய பாலம், பவானி கூடுதுறை  மூடல் : காவிரி ஆற்றில் வினாடிக்கு 2.10 லட்சம் கன அடி தண்ணீர் பெருக்கெடுத்து வருவதால் ஈரோடு மாவட்டம் பவானிக்கும், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்துக்கும் இடையே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மிகப் பழமை வாய்ந்த பாலம் மூடப்பட்டது. 

ஏற்கனவே பலவீனமான இப்பாலத்தில் இருசக்கர மற்றும் இலகு ரக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தன. வெள்ளப் பெருக்கை வேடிக்கை பார்க்கப் பகுதிகளிலிருந்து ஏராளமானோர் பாலத்தில் திரண்டு வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பாலத்தின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் நலன் கருதி போக்குவரத்திற்குத் தடை செய்யப்பட்டது. 

காவிரி பவானி ஆறுகள் சங்கமிக்கும் பரிகாரத்தனமான பவானி கூடுதுறை நேற்று முதல் மூடப்பட்டுள்ளது. இங்குப் பரிகார வழிபாடுகளுக்குப் புனித நீராடவும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com