கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு: போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு: போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழையினால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 2 லட்சம் கன அடிக்கு மேல் கூடுதலான உபரிநீர் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் வரலாறுகாணாத வகையில் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளநீர் சீறிப் பாய்கிறது. இதனால் கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கரையோர கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. கொள்ளிடம் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டு, சிதம்பரம், காட்டுமன்னார்குடி பகுதிகளில் திட்டக்காட்டுர், கீழகுண்டலபாடி, அக்கரை ஜெயங்கெண்டபட்டினம், ஜெயங்கொண்ட பட்டினம், வீரன்கோவில் திட்டு, பெரியக்காரமேடு, சிக்காரமேடு, கீழப்பெரும்பை, சிந்தாம்பாளையம், இளந்திரமேடு, தெற்கு பிச்சாவரம் உள்ளிட்டு பல கிராமங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. ஏராளமான பொதுமக்கள் புயல் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று மயிலாடுதுறை மாவட்டத்திலும் கொள்ளிடம் கரையோர கிராமங்களான  அலக்குடி, ஆணைகாரசத்திரம், கோபாலசமுத்திரம், மாதிரிவேளூர், வடரங்கம் மேலவாடி, முதலைமேடு, சோதியங்குடி ஆகிய கிராமங்களில் தண்ணீர் புகுந்து சுமார் 3000க்கும் மேற்பட்ட மக்கள் பள்ளிக்கூடங்களிலும், முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று தஞ்சாவூர் மாவட்டத்திலும் வெள்ளநீர் புகுந்து கிராம மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர தண்ணீர் சூழ்ந்த கிராமங்களில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் வீட்டின் பாதுகாப்பு கருதி வீட்டிலே தங்கியுள்ளனர். கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் இன்னும் கூடுதலாக திறக்கப்பட்டால் பல கிராமங்கள் மூழ்கும் அபாயம் உள்ளது.

எனவே, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை துரிதப்படுத்திடவும், உடைப்பு ஏற்பட்டுள்ள இடங்களை சரிசெய்யவும், நிவாரண முகாம்களிலும், தண்ணீர் சூழ்ந்து வீடுகளில் தங்கியுள்ள மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவும், கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள உடைப்பை நிரந்தரமாக சரிசெய்யவும், நிரந்தர தடுப்பணை கட்டிடவும், வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து உடமைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிடவும், வெள்ளம் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால் பேரிடர் மீட்புப் படைகளை தயார் நிலையில் வைத்திருக்கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com