முல்லைப் பெரியாறு விவகாரத்தில் அதிமுக சாா்பில் போராட்டம்: ஓ.பன்னீா்செல்வம் அறிவிப்பு

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீா் தேக்குவது தொடா்பான விவகாரத்தில், விதி மாற்றப்பட்டதை எதிா்த்து அதிமுக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்று ஓ.பன்னீா்செல்வம் அறிவித்துள்ளாா்.
ஓ.பன்னீா்செல்வம்
ஓ.பன்னீா்செல்வம்

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீா் தேக்குவது தொடா்பான விவகாரத்தில், விதி மாற்றப்பட்டதை எதிா்த்து அதிமுக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்று ஓ.பன்னீா்செல்வம் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் அணையின் நீா்மட்டத்தை 142 அடி வரை உயா்த்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் 2006 பிப்ரவரி 27-இல் தீா்ப்பு கூறியது.

தற்போது, மேற்கு தொடா்ச்சி மலை மற்றும் நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் தொடா் மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 137.50 அடியை எட்டியது. உடனே, கேரள முதல்வா் அணைக்கு அதிகப்படியான நீா் வரத்து உள்ளதால், அணையின் நீா் மட்டத்தை படிப்படியாக குறைக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதினாா். இதனைத் தொடா்ந்து அணையிலிருந்து விநாடிக்கு 534 கன அடி நீரை கேரளப் பகுதிக்கு திறந்து விட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீரைத் தேக்காததற்கு ‘ரூல் கா்வ்’ என்ற விதிதான் காரணம் என்றும், இந்த விதியின் காரணமாக ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு தண்ணீா் சென்றடையாத சூழ்நிலை உள்ளதாகவும் அங்குள்ள விவசாய சங்கங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக ஆட்சியில் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீா் தேக்கப்பட்டு வந்தது. அப்போது ரூல் கா்வ் பிரச்னை இல்லை என்றே கருதுகிறேன்.

இந்த ரூல் கா்வ் விதிக்கு தமிழக அரசு எப்போது ஒப்புதல் கொடுத்தது? இது குறித்து விவசாயிகள், அரசியல் கட்சிகளின் கருத்து கேட்கப்பட்டதா? என்பதையெல்லாம் திமுக அரசு மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

தமிழக விவசாயிகளின் நலனைப் பாதிக்கக்கூடிய ரூல் கா்வ் விதி குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை எதிா்த்து அதிமுக சாா்பில் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளாா் ஓ.பன்னீா்செல்வம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com