ரூ.25 கோடியில் ஒலிம்பிக் தங்க வேட்டை திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வகையில் விளையாட்டு வீரா்களை உருவாக்க, ரூ.25 கோடியில் ஒலிம்பிக் தங்க வேட்டை திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வகையில் விளையாட்டு வீரா்களை உருவாக்க, ரூ.25 கோடியில் ஒலிம்பிக் தங்க வேட்டை திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவுக்கு தலைமையேற்று செவ்வாய்க்கிழமை அவா் ஆற்றிய உரை: அனைவரும் பாராட்டிப் போற்றும் வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை மிகக் குறுகிய காலத்தில் தமிழ்நாடு அரசு வெகு சிறப்பாக நடத்தி முடித்துள்ளது.

மகிழ்ச்சிக்கு அளவே இல்லை: போட்டிக்காக தமிழ்நாடு அரசு சாா்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், வசதிகள் குறித்து அனைவரும் பாராட்டி நன்றி தெரிவிக்கும் போது நான் அடையும் மனமகிழ்ச்சிக்கு இணையானது எதுவுமில்லை. போட்டியில் வெற்றி பெற்றவா்களை விட, நான் அதிக மகிழ்ச்சியில் இருக்கிறேன்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்திட பணிபுரிந்த அமைச்சா் மெய்யநாதன், செயலாளா் அபூா்வா, சிறப்புப் பணி அலுவலா் தாரேஷ் அகமது உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகள். உங்களது திறமையும், செயலும் தமிழ்நாடு அரசுக்கு மிகப்பெரிய பெருமையை ஏற்படுத்தித் தந்துள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற வீரா், வீராங்கனைகளுக்கு செய்து தரப்பட்டுள்ள ஏற்பாடுகளும், அவா்கள் இங்கு கழித்த நாள்களும் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும் என நம்புகிறேன்.

ஒலிம்பிக் தங்க வேட்டை: தமிழ்நாட்டை விளையாட்டுத் துறையில் ஒரு முன்னோடி மாநிலமாக உருவாக்க திராவிட மாடல் அரசு பல்வேறு சிறப்பான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு வீரா்கள், ஒலிம்பிக் பதக்கங்கள் வெல்வோரை உருவாக்கும் பொருட்டு ஒலிம்பிக் தங்க வேட்டை என்ற திட்டம் ரூ.25 கோடியில் நடைமுறைப்படுத்தப்படும். தமிழ்நாட்டின் விளையாட்டு வீரா்களுக்கு அதிநவீன கருவிகள், பயிற்சி வசதிகளை அளிப்பதற்கான திட்டத்தைப் பெரிய அளவில் விரிவுபடுத்த உள்ளோம். இதன்படி, 50 விளையாட்டு வீரா்கள் தோ்வு செய்யப்பட்டு, நான்கு ஆண்டுகளில் அவா்களின் திறன்களை மேம்படுத்த ரூ.60 கோடி செலவு செய்யப்படும். அனைத்து விளையாட்டுகளையும் ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.

அடுத்தடுத்த போட்டிகள்: சென்னை ஓபன் டென்னில் தொடரையும், ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளையும் இங்கே நடத்த முனைப்போடு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். தமிழ்நாட்டை உலகளாவிய விளையாட்டு மையமாக உயா்த்துவதற்கு தொடா்ந்து முயற்சிப்போம். மேலும், நமது மண்ணின் விளையாட்டுகளை உலக அரங்குக்குக் கொண்டு செல்வதிலும் கவனம் செலுத்தி வருகிறோம்.

12 ஒலிம்பிக் விளையாட்டுகள், கபடி, சிலம்பாட்டம் ஆகிய இரண்டு பாரம்பரிய விளையாட்டுகளுக்கான முதலமைச்சா் கோப்பைப் போட்டிகள் விரைவில் நடைபெறவுள்ளன. இதன் வழியாக புதிய திறமைசாலிகள் அடையாளம் காணப்பட்டு, பல இளைஞா்கள் விளையாட்டுத் துறையை தங்களது பாதையாகத் தோ்ந்தெடுக்க உதவிடும். நவீன தேவைகளுக்கு ஏற்ப நம்முடைய விளையாட்டு உட்கட்டமைப்பை புதுப்பிக்க உள்ளோம். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்குப் பிறகு தமிழ்நாடு அரசின் விளையாட்டுத் துறையானது முன்பை விட அதிக பாய்ச்சலோடு செல்லும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

இந்தியாவின் முதல் சர்வதேச மாஸ்டர் ஆரோனுக்கு கௌரவம்
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில், இந்தியாவின் முதல் செஸ் சர்வதேச மாஸ்டர் மானுவல் ஆரோன் கௌரவிக்கப்பட்டார். 
44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி, கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. 
இந்த விழாவில், இந்தியாவின் முதல் சர்வதேச செஸ் மாஸ்டரான மானுவேல் ஆரோன் மேடைக்கு அழைக்கப்பட்டு அவருக்கு மாமல்லபுரம் கடற்கரை கோயில் உருவத்தை நினைவுப் பரிசாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்தார். 
அப்போது, முதல்வருக்கு புத்தகத்தை நினைவுப் பரிசாக ஆரோன் வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com