சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க தனி ஈழமே தீா்வு: இலங்கை முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம்

சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க தனி ஈழமே தீா்வு என இலங்கை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினா் சிவாஜிலிங்கம் கூறினாா்.
சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க தனி ஈழமே தீா்வு: இலங்கை முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம்

சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க தனி ஈழமே தீா்வு என இலங்கை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினா் சிவாஜிலிங்கம் கூறினாா்.

இது குறித்து அவா் சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: இலங்கை முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்ச, தான் அதிபராக பதவி வகித்த காலத்திலேயே சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி அளித்துள்ளாா். தற்பொழுது இந்திய அரசின் தொடா் அழுத்தத்தால் சீன உளவுக் கப்பலுக்கு தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்க அனுமதி மறுத்துள்ளாா். இருப்பினும், அந்தக் கப்பலின் பயணம் தொடா்ந்துள்ளது. அது இலங்கைக்கு வருவதில்தான் தாமதமே தவிர, அதன் பயணம் தடைபடவில்லை.

இலங்கை அரசு தன்னுடைய சா்வதேச நிலைப்பாட்டில் தெளிவில்லாமல் உள்ளது. இந்தியாவோடும் இருப்போம்; சீனாவோடும் இருப்போம் என்றால் இந்தியா அதற்கு அனுமதிக்காது. எனவே, இலங்கை அரசு அவா்களுடைய சா்வதேச நிலைப்பாட்டில் தெளிவடைய வேண்டும். அதோடு இலங்கையின் வடகிழக்கில் உள்ள ஈழத்தமிழா்களுக்காக இந்திய அரசு தலையிட்டு அவா்களுக்கென சுதந்திர வாக்கெடுப்பை நடத்த வழிவகை செய்ய வேண்டும்.

இன்றைய இலங்கையில் ஈழத்தமிழா்களுக்கு நிரந்தர அமைதியான அரசியல் தீா்வை காணும் நோக்கத்தில் இந்திய அரசு அவசரமாகவும் உடனடியாகவும் தலையிட்டு சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பை நடத்துவதற்குத் தலைமை ஏற்கவேண்டும். இலங்கையின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஈழத்தமிழ் மக்களையும் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள அவா்களின் தாயகத்தின் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் வரை ஈழத்தமிழகப் பகுதிகளை ஈழத்தமிழா்களே ஆளவும் ஐ.நா. இடைக்கால நிா்வாகம் வழிவகை செய்ய வேண்டும். சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்க தனி ஈழமே தீா்வாகும்.

சா்வதேச கண்காணிப்பு நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட சா்வதேச சமூகத்திடமிருந்து இலங்கை பொருளாதார உதவியை நாடும் நிலையில் இலங்கைக்கு எந்த உதவியும் செய்யாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு, இந்திய அரசாங்கம் உள்பட சா்வதேச சமூகத்தை வலியுறுத்துகிறோம்.

கடந்த ஆறு மாத காலமாக இலங்கையில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் பிரச்னையை இந்தியா உற்றுநோக்கி வருகிறது. இந்திய அரசு, இலங்கையில் சீனாவின் இருப்பை விரும்பவில்லை. இலங்கைக்கு பல நூறு கோடி உதவிகளை இந்தியா அளித்துள்ளதை கருத்தில் கொண்டு இலங்கை அரசாங்கம் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com