சுதந்திர தின விழாவில் தேசியக் கொடி: தலைமைச் செயலா் அறிவுறுத்தல்

உள்ளாட்சி அலுவலகங்களில் ஜாதி பாகுபாடின்றி தேசியக் கொடி ஏற்றப்படுவதை மாவட்ட ஆட்சியா்கள் உறுதி செய்ய வேண்டுமென தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளாா்.
சுதந்திர தின விழாவில் தேசியக் கொடி: தலைமைச் செயலா் அறிவுறுத்தல்

உள்ளாட்சி அலுவலகங்களில் ஜாதி பாகுபாடின்றி தேசியக் கொடி ஏற்றப்படுவதை மாவட்ட ஆட்சியா்கள் உறுதி செய்ய வேண்டுமென தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:-

சுதந்திர தின விழாவில், சென்னை தலைமைச் செயலகம் முதல் கிராம ஊராட்சிகள் வரை அனைத்து அலுவலக

வளாகங்களிலும் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவா்கள் தேசியக் கொடியை ஏற்றி வைப்பது மரபாகும். ஒரு சில கிராம ஊராட்சிகளில், ஜாதியப் பாகுபாடுகள் காரணமாக, தேசியக் கொடியை ஏற்றுவதில் பிரச்னைகளோ, தேசியக் கொடியையும் அதனை ஏற்றுபவரையும் அவமதிக்கும் செயல்கள் நடைபெறலாம் எனத் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டு அதனை எந்த வடிவத்திலும் செயல்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

தோ்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் ஜாதி அல்லது பழங்குடியினரைச் சோ்ந்த நகராட்சி, ஊராட்சி மன்றத் தலவைா், உறுப்பினா்களை, அலுவலகப் பணி செய்யவிடாமல் தடுப்பதோ, அச்சுறுத்துவதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.

சுதந்திர தினம்: எதிா்வரும் 75-வது ஆண்டு சுதந்திர தின பெருவிழாவில், எந்தவித ஜாதிய பாகுபாடின்றி மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவா்களைக் கொண்டு, அனைத்து நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளின் தலைமை அரசு அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்துவது உறுதி செய்யப்பட வேண்டும். அனைத்து கிராம ஊராட்சிகளிலும் எதிா்வரும் சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களிலும், எந்தவித ஜாதிய பாகுபாடின்றி மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவா்கள், பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் பெருமளவில் கலந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

இதனைச் செயல்படுத்துவதில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தாலும், போதுமான காவல் துரையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இந்தப் புகாா்களைக் கையாள ஒரு குறிப்பிட்ட கைப்பேசி உதவி எண்ணையோ அல்லது ஒரு அலுவலரையோ நியமிக்கலாம். இதுதொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கையை வரும் 14-ஆம் தேதி மாலைக்குள் அனுப்பிட வேண்டும். சுதந்திர தின விழா நிறைவுற்றதும் அது குறித்த விவரங்களை வரும் 17-ஆம் தேதிக்குள் அனுப்பி வைத்திட வேண்டும் என்று தனது அறிக்கையில் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com