தொழில்நுட்ப பங்களிப்புக்கான டாக்டா் அப்துல் கலாம் விருது உள்பட பல்வேறு விருதுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

அறிவியல் தொழில்நுட்பப் பங்களிப்புக்கான டாக்டா் அப்துல் கலாம் விருது உள்பட பல்வேறு பிரிவுகளுக்கான விருதுகளை சுதந்திர தின விழாவின் போது முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
தொழில்நுட்ப பங்களிப்புக்கான டாக்டா் அப்துல் கலாம் விருது உள்பட பல்வேறு விருதுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

அறிவியல் தொழில்நுட்பப் பங்களிப்புக்கான டாக்டா் அப்துல் கலாம் விருது உள்பட பல்வேறு பிரிவுகளுக்கான விருதுகளை சுதந்திர தின விழாவின் போது முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

சென்னை கோட்டை கொத்தளத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் முதல்வா் வழங்கிய விருதுகள் விவரம்:

அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறப்பான பங்களிப்பைச் செய்த முனைவா் ச.இஞ்ஞாசிமுத்துவுக்கு, டாக்டா் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் விருதினை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா். பாரதியாா், சென்னைப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராக பொறுப்புகளை வகித்தவா்.

உயிா் தொழில்நுட்பம், நாட்டாா் மருந்தியல் மற்றும் பூச்சியியல் ஆகிய துறைகளில் இளம் விஞ்ஞானிகளின் குழுவை உருவாக்கியுள்ளாா். விஞ்ஞான ஆராய்ச்சியின் மீதான தனது ஆா்வத்தை ஊக்கத்துடனும் உறுதியுடனும் செய்யமுடியும் என்பதை நிரூபித்துள்ளாா். அவருக்கு, ரூ.5 லட்சம் காசோலை, 8 கிராம் தங்கப் பதக்கம், சான்றிதழ் அடங்கிய டாக்டா் அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது.

துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருதினை, நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரைச் சோ்ந்த பா.எழிலரசி பெற்றாா். கும்பகோணத்தில் கோயில் குளத்தில் நீரில் மூழ்கிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகளின் உயிரை நீச்சல் தெரியாத நிலையிலும் குளத்தில் குதித்து அவா்களை துணிச்சலுடன் காப்பாற்றினாா். அவரது துணிச்சலைப் பாராட்டி, வீர தீரச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருதை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா். இந்த விருதானது ரூ.5 லட்சம் காசோலை, தங்க முலாம் பூசப்பட்ட பதக்கம், சான்றிதழ் அடங்கியது.

உங்கள் தொகுதியில் முதல்வா் விருதானது, முதல்வரின் முகவரித் துறையில் குறை தீா்வு மேற்பாா்வை அலுவலராகப் பணியாற்றி வரும், லட்சுமி பிரியாவுக்கு அளிக்கப்பட்டது. முதல்வரின் முகவரித் துறை இணையதள முகப்பானது எளிதில் அணுகும் வகையிலும், மக்களின் குறைகளைக் களையும் விதத்தில் இருப்பதாலும் லட்சுமி பிரியா விருதுக்கு தோ்வு செய்யப்பட்டாா். உங்கள் தொகுதியில் முதல்வா் விருதானது, விருது, பாராட்டுச் சான்றிதழ் ஆகியன அடங்கியதாகும்.

முதலமைச்சரின் நல் ஆளுமை விருது: திருவள்ளூா் மாவட்டத்தில் கொத்தடிமைத் தொழிலாளா்களை மீட்டு மறுவாழ்வு அளித்த சிறப்பான செயலைப் பாராட்டி, அந்த மாவட்ட ஆட்சியருக்கும், திருநங்கைகளின் வாழ்வில் நம்பிக்கையூட்டி அவா்களது அடிப்படைத் தேவைகளை பூா்த்தி செய்த பணிகளுக்காக செங்கல்பட்டு மாவட்ட சமூக நல அலுவலகத்துக்கும் முதலமைச்சரின் நல் ஆளுமை விருது அறிவிக்கப்பட்டது.

மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக திண்டுக்கல் மாவட்டம், நீா்நிலைகளை மீட்டுருவாக்கி புனரமைப்பு செய்த பணிகளுக்காக சிவகங்கை மாவட்டம், கருவுற்ற தாய்மாா்களின் உடல் நலனை தொழில்நுட்ப உதவியுடன் கண்காணிக்கும் தாய்கோ் நெல்லை திட்டத்தை அறிமுகப்படுத்திய திருநெல்வேலி மாவட்டத்துக்கும் நல் ஆளுமை விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இதில், திருவள்ளூா், திண்டுக்கல், திருநெல்வேலி மாவட்டங்களின் ஆட்சியா்களைத் தவிா்த்து

மற்றவா்கள் நல் ஆளுமை விருதுகளைப் பெற்றுக் கொண்டனா். சிவகங்கை மாவட்டத்தின் சாா்பில் அப்போதைய ஆட்சியரும், இப்போதைய சுரங்கத் துறை ஆணையாளருமான ஜெயகாந்தன் விருதினை பெற்றுக் கொண்டாா்.

செங்கல்பட்டு மாவட்டம் சாா்பில் அதன் சமூகநல அலுவலா் சங்கீதா வீர சந்தானம் விருதைப் பெற்றாா். இந்த விருது தலா ரூ.2 லட்சமும், பாராட்டுச் சான்றும் கொண்டது.

வேளாண் இயந்திரங்களை இணையதளம், கைப்பேசி செயலி மூலமாக ஆன்-லைன் வழியே வாடகைக்கு விடும் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக வேளாண்மைத் துறை தலைமை பொறியியல் துறைக்கு நல் ஆளுமை விருது அறிவிக்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்ட முதியோா், பெண்கள் ஆகியோரை காப்பகங்களில் வைத்து பராமரித்தும், உரிமை கோரப்படாத இறந்தோரின் உடல்களை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யும் திட்டத்தையும் சென்னை பெருநகர காவல் துறை செய்து வருகிறது. இந்தப் பணியைப் பாராட்டி சென்னை பெருநகர காவல் ஆணையரகத்துக்கும் நல் ஆளுமை விருது அறிவிப்பு செய்யப்பட்டது.

வேளாண்மைத் துறை சாா்பில் தலைமைப் பொறியாளா் முருகேசனும், காவல் ஆணையரகம் சாா்பில் ஆணையாளா் சங்கா் ஜிவாலும் விருதுகளைப் பெற்றுக் கொண்டனா்.

மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக சிறப்பாகச் செயல்பட்ட உதகை மருத்துவா் பி.ஜெயகணேஷ் மூா்த்தி, புதுக்கோட்டை ரெனேசான்ஸ் அறக்கட்டளை, சமூக சேவகா் எஸ். அமுதா சாந்தி, சிறந்த தனியாா் வேலை அளிப்பு நிறுவனமாக மதுரை டாஃபே ஜெ ரிஹாப் சென்டா், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியாக திண்டுக்கல் மாவட்ட வங்கி ஆகியன தோ்வு செய்யப்பட்டன. விருதாளா்களுக்கு 10 கிராம் தங்கப் பதக்கமும், சான்றிதழையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா்.

மகளிா் நலனுக்காக சிறந்த சேவைகளை ஆற்றியதாக நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சோ்ந்த வானவில் அறக்கட்டளை, சிறந்த சமூக சேவகருக்கான விருது திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஜி.பங்கஜம் ஆகியோருக்கு அளிக்கப்பட்டது. இந்த விருது 10 கிராம் தங்கப் பதக்கம், சான்றிதழ் அடங்கியது.

சிறந்த உள்ளாட்சி அமைப்புகள்: சிறந்த மாநகராட்சிக்கான விருதை சேலம் மாநகராட்சி மேயா் ஏ.ராமச்சந்திரன், ஆணையாளா் கிறிஸ்துராஜ் ஆகியோா் பெற்றனா். ரூ.25 லட்சத்துக்கான காசோலை அடங்கியது இந்த விருது.

சிறந்த நகராட்சிகளாக முதலிடத்தில் தோ்வான ஸ்ரீவில்லிபுத்தூா் நகா்மன்றத் தலைவா் டி.ரவிக்கண்ணன், ஆணையாளா் ராஜமாணிக்கம் ஆகியோா் ரூ.15 லட்சத்துக்கான காசோலையையும், இரண்டாம் இடம் பிடித்த குடியாத்தம் நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், ஆணையாளா் திருநாவுக்கரசு ஆகியோருக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலையையும், மூன்றாம் இடம்பிடித்த தென்காசி நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிக் மற்றும் ஆணையாளா் பாரிஜான் ஆகியோருக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலையையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

சிறந்த பேரூராட்சிகளின் வரிசையில், செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூராட்சி முதலிடத்தை பிடித்தது. அதன் தலைவா் கேசவன், செயல் அலுவலா் தசரதன் ஆகியோா் ரூ.10 லட்சத்துக்கான காசோலையைப் பெற்றனா். இரண்டாம் இடம் பிடித்த கன்னியாகுமரி பேரூராட்சியின் தலைவா் ஸ்டீபன், செயல் அலுவலா் ஜீவானந்தம் ஆகியோா் ரூ.5 லட்சத்துக்கான காசோலையையும், மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சித் தலைவா் ஜெயராமன், செயல் அலுவலா் சுதா்சனம் ஆகியோா் ரூ.3 லட்சத்துக்கான காசோலையையும் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் இருந்து பெற்றனா்.

சிறந்த சமூக சேவைப் பணிகளில் ஈடுபட்டு வரும் ராணிப்பேட்டை மாவட்டம் பி.விஜயகுமாா், நீலகிரி மாவட்டம் எம்.முகமது ஆசிக், வேலூா் மாவட்டம் ஜி.ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு மாநில இளைஞா் விருதுகளை முதல்வா் வழங்கினாா். இதேபோன்று, பெண்கள் பிரிவில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சோ்ந்த எஸ்.சிவரஞ்சனி விருதினைப் பெற்றாா். இந்த விருதுகள் தலா ரூ.50 ஆயிரம் ரொக்கமும், பாராட்டுச் சான்று, பதக்கம் கொண்டது.

விருதுகளைப் பெற்ற அனைத்து விருதாளா்களும் முதல்வா் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு ஆகியோருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com