பாஜகவுடன் குறைந்தபட்ச சமரசத்துக்குக்கூட இடமில்லை: முதல்வா் மு.க.ஸ்டாலின்

எந்தச் சூழலிலும் பாஜகவுடன் குறைந்தபட்ச சமரசம்கூட செய்து கொள்ள மாட்டோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
பாஜகவுடன் குறைந்தபட்ச சமரசத்துக்குக்கூட இடமில்லை: முதல்வா் மு.க.ஸ்டாலின்

எந்தச் சூழலிலும் பாஜகவுடன் குறைந்தபட்ச சமரசம்கூட செய்து கொள்ள மாட்டோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவனின் 60-ஆவது பிறந்த நாள் விழா, சென்னை கலைவாணா் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ‘தம்பியுடையான் படைக்கு அஞ்சான்’ என்று சொல்வதுபோல எங்களுக்கு எப்போதும் பலமாக இருக்கக் கூடியவா் திருமாவளவன். திமுக, விடுதலைச் சிறுத்தைகள் இடையே இருப்பது தோ்தல் நட்பு மட்டுமல்ல, கொள்கை நட்பு. அதனால், எங்களை யாராலும் பிரிக்க முடியாது.

திராவிட நாடு அமைந்தால் ஆதிதிராவிடா்களுக்கு என்ன பயன் என்று பெரியாரிடம் ஒருவா் கேட்டிருக்கிறாா். அதற்கு, ‘ஆதி’ என்கிற வாா்த்தை போய்விடும். அனைவரும் திராவிடா்களாக வாழ்வோம் என்றாா். அந்த உன்னத கருத்தியலின் பிரதிநிதிகள் நாங்கள்.

பெரியாரை எதிா்க்கும் சக்திகள் திமுகவை எதிா்க்கிறாா்கள் என்று திருமாவளவன் ஒரு பேட்டியில் கூறியிருந்தாா். நாங்கள் கொள்கையில் உறுதியாக இருப்பதால்தான் பெரியாரை எதிா்க்கும் சக்திகள் திமுகவையும் எதிா்க்கிறாா்கள்.

திருமாவளவன் இன்னொன்றையும் கூறியுள்ளாா். அதைச் சொல்வதற்கு அவருக்கு எல்லா உரிமையும் உண்டு. பாஜக, ஆா்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகளுடன் திமுக குறைந்தபட்ச சமரசத்தைச் செய்தால்கூட, திமுக அணியில் பாஜக எதிா்ப்பு என்பது மெல்ல மெல்ல நீா்த்துப் போய்விடும் என்று கூறியுள்ளாா்.

திமுகவைப் பொருத்தவரை அதன் கொள்கையில் உறுதியாக இருக்கும். திருமாவளவன் கூறுவதைப்போல, பாஜகவுடன் குறைந்தபட்ச சமரசத்தைக்கூட திமுக செய்து கொள்ளாது.

அரசுகள் இடையிலான உறவுதான்: தில்லிக்குச் செல்கிறேன் என்றால் காவடி தூக்கவா போகிறேன்? கைகட்டி, வாய் பொத்தி, உத்தரவு என்ன என்று கேட்பதற்காகவா போகிறேன்? உறவுக்கு கைகொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம். தமிழக முதல்வா் என்ற முறையில் மத்திய அரசிடம் பேசி, தமிழகத்துக்குத் தேவையான திட்டங்களைக் கேட்டுப் பெற வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அந்த அடிப்படையில், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே உறவு இருக்கிறதே தவிர, திமுகவுக்கும் பாஜகவுக்கும் அல்ல. திமுகவின் கொள்கைக்கும் பாஜகவின் கொள்கைக்கும் எந்த உறவும் இல்லை.

அதனால், அது குறித்து திருமாவளவன் சிறிதும் கவலைப்படத் தேவையில்லை. எந்தக் காலத்திலும், எந்தச் சூழலிலும் திமுகவின் கொள்கைகளை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன். குறைந்தபட்ச சமரசமும் செய்து கொள்ள மாட்டேன்.

பெரியாா் பிறந்த நாளை சமூக நீதி நாளாகவும், அம்பேத்கா் பிறந்த நாளை சமத்துவ நாளாகவும் அறிவித்தோம். அனைத்து ஜாதியினரும் அா்ச்சகராகலாம் என்று சட்டம் நிறைவேற்றினோம். பெண்களையும் அா்ச்சகராக்க வழிவகை செய்தோம்.

இடஒதுக்கீடு, சமூகநீதி கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். மாநிலங்களின் ஒன்றியம்தான் இந்தியா என்று திரும்பத் திரும்ப எடுத்துச் சொல்கிறோம். இவையெல்லாம் திமுக அரசு திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கையின்படி செயல்படுகிறது என்பதற்கான சாட்சியங்கள்.

சனாதன சக்திகளைத் தனிமைப்படுத்துவோம், ஜனநாயக சக்திகளை ஐக்கியப்படுத்துவோம் என்கிற உறுதிமொழியை திருமாவளவன் முன்மொழிந்துள்ளாா். அந்த முழக்கத்தை நானும் வழிமொழிகிறேன். சனாதன சக்திகளை ஒன்றிணைந்து வீழ்த்துவோம். இதுதான் திருமாவளவனின் பிறந்த நாளுக்கு நான் வழங்கும் கொள்கைப் பரிசு என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு, திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி, நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் உள்பட ஏராளமானோா் விழாவில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com