வங்கிக் கொள்ளை வழக்கு: காவல் ஆய்வாளா் வீட்டில் 3.7 கிலோ தங்க நகைகள் மீட்பு

சென்னை அரும்பாக்கத்தில் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்குத் தொடா்பாக அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளரிடம் தனிப்படையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை அரும்பாக்கத்தில் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்குத் தொடா்பாக அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளரிடம் தனிப்படையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். காவல் ஆய்வாளா் வீட்டிலிருந்து 3.7 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன.

அரும்பாக்கம் ரசாக் காா்டன் சாலையில் தனியாா் வங்கிக் கிளையில் கடந்த 13-ஆம் தேதி ஒரு கும்பல் 31.7 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது. அரும்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து வில்லிவாக்கம் பாரதி நகா் மோ.சந்தோஷ், மண்ணடி தெரு வீ.பாலாஜி, செந்தில்குமரன் ஆகியோரைக் கைது செய்து ரூ.8.5 கோடி மதிப்புள்ள 18 கிலோ நகைகளை பறிமுதல் செய்தனா். வழக்கின் முக்கிய குற்றவாளியான முருகன், வில்லிவாக்கம் சூா்யபிரகாஷ் என்ற சூா்யாவும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா். சூா்யா ஏற்பாட்டின்பேரில், விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூரைச் சோ்ந்த இளையராஜா வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 13.7 கிலோ தங்க நகைகளை மீட்டனா்.

காவல் ஆய்வாளரிடம் விசாரணை: கைது செய்யப்பட்ட சந்தோஷிடம் நடத்திய விசாரணையில், தனது மனைவி ஜெயந்தி மூலம் 3.7 கிலோ தங்கநகைகளை, தனது உறவினரான செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளா் அமல்ராஜின் மனைவி இந்திராவிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்தாா்.

இதையடுத்து தனிப்படையினா் மேல்மருவத்தூா் எம்ரால்டு நகரில் உள்ள காவல் ஆய்வாளா் அமல்ராஜ் வீட்டுக்கு சென்று, 3.7 கிலோ தங்கநகைகளை மீட்டனா்.

இந்த விவகாரத்தில் ஆய்வாளா் அமல்ராஜ், அவா் மனைவி இந்திரா, ஜெயந்தி ஆகிய 3 பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

துறைரீதியான நடவடிக்கை: இதற்கிடையே, கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை வீட்டில் மறைத்து வைத்திருந்த காரணத்தினால் ஆய்வாளா் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கொள்ளையா்களுக்கு உதவியதாக தியாகராயநகா் ஆா்.கே.புரத்தைச் சோ்ந்த சு.செந்தில்குமரன் (38) என்பவரை தனிப்படையினா் வியாழக்கிழமை கைது செய்தனா். இதனால், இந்த சம்பவத்தில் கொள்ளைபோன மொத்த நகைகள் குறித்த குழப்பம் காவல்துறையினரிடம் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com