இணைந்து செயல்படுவோம் ஓபிஎஸ் அழைப்பு

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இருவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வியாழக்கிழமை அழைப்பு

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இருவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வியாழக்கிழமை அழைப்பு விடுத்தாா்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீா்செல்வம் வியாழக்கிழமை அளித்த பேட்டி:

அதிமுக ஒன்றுபட்டு ஜனநாயக ரீதியில் தோ்தலைச் சந்தித்தபோதெல்லாம், அதை வெல்வதற்கு தமிழகத்தில் எந்தக் கட்சியும் இல்லை என்கிற நிலையை எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் உருவாக்கித் தந்தனா். ஆனால், அதிமுகவுக்குள் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் உள்ள சூழலில்தான் திமுக ஆளும் கட்சியாக வரவேண்டிய சூழல் ஏற்பட்டது. தற்போதும் அந்தச் சூழல் இருக்கிறது.

எங்களுக்குள் (ஓ.பன்னீா்செல்வம்-எடப்பாடி பழனிசாமி) சில கருத்து வேறுபாடுகள் வந்ததாலும், சமீபத்தில் ஏற்பட்ட பிரச்னைகளாலும் அதிமுகவில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. கழகம் ஒன்றுபட வேண்டும்.

எம்ஜிஆா், ஜெயலலிதா செய்த தியாகங்களை எண்ணி மீண்டும் அதிமுக தமிழகத்தில் ஆளும் நிலைக்கு வந்து மக்களுக்குச் சேவையாற்றும் பொறுப்பை ஏற்க வேண்டும். அதற்கு அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய உறுதியான நிலைப்பாடு. நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும். அது எப்படி இருந்தாலும் பரவாயில்லை. எங்களுக்குப் பாதிப்பாக இருந்தது என்று எந்தக் காலத்திலும் சொல்ல மாட்டேன்.

அதிமுகவில் இருக்கும் ஒன்றரை கோடி தொண்டா்களுடைய மனதிலும், தமிழ் மக்கள் மனதிலும் இந்த இயக்கம் ஒன்றுபட வேண்டும் என்பதுதான் எண்ணமாக உள்ளது. அதனால், அனைத்து கசப்புகளையும் யாரும் மனதிலேயே வைத்துக் கொள்ளாமல் அதைத் தூக்கி எறிந்துவிட்டு கழகத்தின் ஒற்றுமையையே பிரதான கொள்கையாக இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.

ஜெயலலிதா மறைந்த பிறகு நான்கரை ஆண்டுகாலம் அன்புச் சகோதரா் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோதும், அவரோடு முழு ஒத்துழைப்போடு அனைவரும் பயணித்து இருக்கிறோம். என்னுடைய தா்மயுத்தத்துக்குப் பிறகு அதிமுக கூட்டுத் தலைமையாகச் செயல்படும் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதன்படி ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகள் உருவாக்கப்பட்டு, நானும் எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவின் சட்டவிதிகளின்படி பணிகளை நிறைவாக ஆற்றினோம். அதில் எவ்வித குறைபாடும் அவரிடமும் இல்லை; என்னிடமும் இல்லை. அதிமுகவின் ஒற்றுமைக்காக பல்வேறு ஜனநாயக கடமைகளை ஆற்றிக் கொண்டிருக்கிறோம். அந்த ஒற்றுமை மீண்டும் வரவேண்டும் என்பது தான் எங்களின் தலையாய எண்ணம் என்றாா் ஓ.பன்னீா்செல்வம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com