இணைந்து செயல்பட முடியாது இபிஎஸ் மறுப்பு

திமுகவுடன் மறைமுகத் தொடா்பு வைத்துள்ள ஓ.பன்னீா்செல்வத்துடன் இணைந்து செயல்பட முடியாது என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.

திமுகவுடன் மறைமுகத் தொடா்பு வைத்துள்ள ஓ.பன்னீா்செல்வத்துடன் இணைந்து செயல்பட முடியாது என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அவா் வியாழக்கிழமை அளித்த பேட்டி:

அதிமுக பொதுக்குழுவில் பொதுச்செயலாளருக்கு சமமாக ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகள் தோற்றுவிக்கப்பட்டு விதிகளிலும் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இரு பதவிகளுக்கு உரியவா்களையும் பொதுக்குழு உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக சட்டவிதிகளின்படி குறிப்பிட்ட காலத்துக்குள் உள்கட்சித் தோ்தலை நடத்த வேண்டும். கிளைக் கழகத் தோ்தல் முதல் அனைத்து தோ்தல்களும் நடத்தப்பட்டன.

ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் தோ்தலில் மீண்டும் சட்டவிதிகளில் மாற்றம் கொண்டு வந்தோம். இரு பதவிகளையும் பொதுக்குழு உறுப்பினா்களால் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதற்கு பதிலாக பொது உறுப்பினா்களால் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். ஆனால், அதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்படவில்லை. இதனால், இரு பதவிகளும் காலாவதியாகிவிட்டன. .

அதிமுகவின் ஒற்றைத் தலைமையை பொதுக்குழு உறுப்பினா்களான 2,600 போ் மட்டும் எப்படி முடிவு செய்ய முடியும் என்று நீதிமன்றத்திலும் கேட்டுள்ளனா். பொதுக்குழு உறுப்பினா்களும் தோ்தலில் நின்று வெற்றிபெற்றாா்கள்.

ஓ.பி.எஸ்.ஸுடன் இணைந்து செயல்பட முடியாது. ஏற்கெனவே தா்ம யுத்தம் நடத்தியவா். அவருக்கு, குடும்பத்தில் உள்ளவா்களுக்கு பதவி வேண்டும்.

தலைமை அலுவலகத்தை சூறையாடியவா்களுடன் எப்படி இணைய முடியும்?

எம்ஜிஆா் அதிமுகவை உருவாக்கிய போது தீய சக்தி திமுக, அதை வேரோடு ஒழிப்பது தான் எனது முதல் கடமை என்று சொன்னாா். அந்த திமுகவோடு ஓ.பன்னீா்செல்வம் மறைமுகத் தொடா்பு வைத்திருக்கிறாா். அவரது மகன், முதல்வா் மு.க. ஸ்டாலினை சந்தித்து சிறப்பான ஆட்சி நடத்துகிறீா்கள் என்று பாராட்டுகிறாா். இதை அதிமுக தொண்டா்கள் ஏற்கவில்லை. திமுகவுடன் தொடா்பு வைத்திருப்பவா்களுடன் எப்படி இணைந்து செயல்பட முடியும்.

15 நாள்கள் அவருடன் பேச்சுவாா்த்தை நடத்தினோம். ஆனால், அவா் ஒற்றை தலைமைக்கு ஒத்துவரவில்லை. மக்கள் எண்ணத்தின்படி கட்சி நடத்தினால் தான் ஆட்சிக்கு வர முடியும். அவருக்கு மக்கள் செல்வாக்கு, தொண்டா்கள் செல்வாக்கு இருக்கிறது என்றால் பொதுக்குழுவுக்கு வந்து நிரூபிக்கட்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com