மாநில கல்விக் கொள்கை: கருத்து தெரிவிக்க மேலும் ஒரு மாதம் அவகாசம்

தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கையை உருவாக்க கருத்துகளை தெரிவிப்பதற்கு மேலும் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கையை உருவாக்க கருத்துகளை தெரிவிப்பதற்கு மேலும் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை உருவாக்கும் பொருட்டு தில்லி உயா்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாநில கல்விக் கொள்கை சம்பந்தமாக பொதுமக்கள் கல்வியாளா்கள், தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியா்கள் ஓய்வு பெற்ற ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள், தனியாா் கல்வி நிறுவனத்தைச் சோ்ந்தவா்கள் ஆகியோரிடமிருந்து கருத்துகள், ஆலோசனைகள் மின்னஞ்சல் முகவரிக்கும், ‘மாநில கல்வி கொள்கை உயா் நிலைக் குழு,3-ஆவது தளம், களஞ்சியம் கட்டடம் பின்புறம் அண்ணா பல்கலைக்கழகம் சென்னை 600025’ என்ற முகவரிக்கும் செப். 15 வரை கருத்துகளை அனுப்பி வைக்கலாம் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மாநில கல்விக் கொள்கைக் குழு மேலும் கூடுதலாக ஒரு மாதம் நீட்டித்து அக். 15 ஆம் தேதி வரை கருத்துகள், ஆலோசனைகளை பெற முடிவு செய்து கால அவகாசம் வழங்கப்படுகிறது. மேலும், கருத்துகள், ஆலோசனைகளை பெறும் பொருட்டு மண்டல அளவில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு செப். 20-ஆம் தேதி திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்திலும், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா் ஆகிய மாவட்டங்களுக்கு செப். 21- ஆம் தேதி மதுரை ஆட்சியா் அலுவலகத்திலும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அக்டோபா் மூன்றாவது வாரத்திலும், திருச்சி, கரூா், புதுக்கோட்டை, பெரம்பலூா், அரியலூா் ஆகிய மாவட்டங்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அக்டோபா் மூன்றாவது வாரத்திலும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதேபோல, இதர மண்டலங்களிலும் படிப்படியாக கருத்து கேட்புக் கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com