லாபத்தில் பங்கு தருவதாகக் கூறி மோசடி: 1000 பேர் திரண்டதால் திருச்சியில் பரபரப்பு

லாபத்தில் பங்கு தருவதாகக் கூறி, மோசடி செய்ததாக தஞ்சாவூரைச் சேர்ந்த பேருந்து நிறுவனம் மீது, பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
லாபத்தில் பங்கு தருவதாகக் கூறி மோசடி: 1000 பேர் திரண்டதால் திருச்சியில் பரபரப்பு

திருச்சி: லாபத்தில் பங்கு தருவதாகக் கூறி, மோசடி செய்ததாக தஞ்சாவூரைச் சேர்ந்த பேருந்து நிறுவனம் மீது, பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 1000 பேர் திரண்டதால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியில் ஒரு தனியார் பேருந்து நிறுவனம் செயல்பட்டு வந்தது. அதன் உரிமையாளர் பொது மக்களிடம் தங்களது நிறுவனத்தில் இயங்கும் பேருந்துகள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களின் பெயரில் நிதி முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக அறிவித்தாராம். 

இதைத்தொடர்ந்து தஞ்சாவூர் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டப் பகுதிகளைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் தலா ரூ. 5 லட்சம் வீதம் முதலீடு செய்துள்ளனர். குறிப்பிட்டதுபோலவே, முதலீடு செய்தவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாதம்தோறும் ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமாக லாபத்தொகை, அவரவரது வங்கி கணக்குக்கு வந்து சேர்ந்துள்ளது.

பத்து ஆண்டுகளுக்கு மேலாக மேற்கண்ட நிறுவனம் எந்த புகாருக்கும் இடமின்றி முதலீட்டாளர்களுக்கு லாபத்தில் பங்கு அளித்து வந்த நிலையில் கடந்த 2021 செப்டம்பர் மாதம், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் திடீரென உயிரிழந்து விட்டார். அதன் பின்னர் முதலீட்டாளர்களுக்கு லாபத்தில் பங்கு தொகை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

எனவே பாதிக்கப்பட்டவர்கள் உரிமையாளரின் குடும்பத்தினரிடம் இது குறித்து கேட்டுள்ளனர். ஆனால், அவர்கள் இது குறித்த விவரம் எதுவும் தங்களுக்கு தெரியாது எனக் கூறியுள்ளனர்.

இதற்கிடையே முதலீடு செய்யப்பட்ட பேருந்துகளின் பெயரில் வங்கிகளில் கடன் இருப்பதும், ஒரு பேருந்துக்கு ரூ. ஒன்றரை கோடிக்கு மேல் முதலீடு பெற்றிருப்பதும் தெரியவந்தது. அது மட்டுமல்லாமல் உரிமையாளர் இறந்த பின்னர் மேற்கண்ட பேருந்து நிறுவனத்தில் பெயர்கள் அனைத்தும் மாற்றப்பட்டது. இதையறிந்து அதிர்ச்சிக்குள்ளான முதலீட்டாளர்கள் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புகார் மனு அளித்தனர்.

ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருப்பதாலும் தொகை அதிகமாக இருந்ததாலும் இது குறித்து திருச்சி மன்னார்புரத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதைத்தொடர்ந்து, தஞ்சாவூர் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் திருச்சி மன்னார்புரம் பகுதியில் இன்று காலை குவிந்தனர்.

அனைவரும் கைகளில் கோரிக்கைகள் எழதப்பட்ட பதாகைகளை ஏந்தி, பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் மேற்கொண்டனர். பின்னர் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்துச் சென்றனர். 

சுமார் ஆயிரத்துக்கும் மே்ற்பட்டோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸாரும் குவிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com