
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட கலவரம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டது.
கடந்த ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை, வானகரத்தில் நடைபெற்றபோது, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளா்கள், எடப்பாடி கே.பழனிசாமி ஆதரவாளா்கள் இடையே மோதல் ஏற்பட்டதில், 47 போ் காயமடைந்தனா். பேருந்து, காா், இருசக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் அதிமுக அலுவலகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. பின்னா், நீதிமன்ற உத்தரவின்பேரில் கடந்த மாதம் 21-ஆம் தேதி ‘சீல்’ அகற்றப்பட்டு, அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து அதிமுக அமைப்புச் செயலாளா் சி.வி.சண்முகம் எம்.பி. கடந்த மாதம் 23-ஆம் தேதி ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ‘அதிமுக சொத்துகளின் அசல் பத்திரங்கள், ஆவணங்கள், ரசீதுகள், 2 கணினிகள், ரூ.31 ஆயிரம் பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டன என்று தெரிவித்திருந்தாா்.
சி.வி.சண்முகம் அளித்த புகாரின்பேரில் ராயப்பேட்டை போலீஸாா், கடந்த 13-ஆம் தேதி ஓ.பன்னீா்செல்வம், வைத்திலிங்கம்,மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோா் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த தகவல் வெளியானது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...