வாழப்பாடி அருகே செல்போன் டவரைக் காணோம்! தனியார் நிறுவனம் புகாரால் காவல்துறை அதிர்ச்சி!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ரூ.25 லட்சம் மதிப்புள்ள செல்போன் டவரை மர்ம கும்ப கும்பல் திருடி சென்றது குறித்து தனியார் நிறுவனம் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை
மாயமான டவர்
மாயமான டவர்


சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ரூ.25 லட்சம் மதிப்புள்ள செல்போன் டவரை மர்ம கும்ப கும்பல் திருடி சென்றது குறித்து தனியார் நிறுவனம் கொடுத்த புகாரின் பேரில், வாழப்பாடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் ஏராளமான செல்போன் டவர்களை மர்ம கும்பல் திருடியதாக தகவல் வெளியாகியுள்ளதால், இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

15 ஆண்டுகளுக்கு முன், நாடு முழுவதும் செல்போன்கள் செயல்படுவதற்கு அனைத்து பகுதிகளிலும் தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு உயரமான ராட்சத டவர்களை அமைத்தன. 

தமிழகத்தில் பல்வேறு தனியார் செல்போன் நிறுவனங்கள் அமைத்த, 100க்கும் மேற்பட்ட டவர்கள் தற்போது செயல்பாடற்று காணப்படுகின்றன. சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்திலும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஏராளமான செல்போன் டவர்கள் உள்ளன.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில் தனியார் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள பல லட்சம் மதிப்புள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு செல்போன் டவரை, மர்ம கும்பல், போலி ஆவணங்களை காண்பித்து, கடந்த ஜூலை மாத இறுதியில், ராட்சத கிரேன் இயந்திரங்களைக் கொண்டு கழற்றி கடத்திச் சென்று, விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம், தங்களது நிறுவனத்திற்குச் சொந்தமான செல்போன் டவர்  மாயமானதாகவும், டவரை திருடிச்சென்ற மர்மகும்பலை கண்டறிந்து, டவரை மீட்டு கொடுக்க வேண்டுமெனவும் வாழப்பாடி  காவல் துறையில் புகார் செய்தது. 

இந்நிறுவனத்தின்  சேலம் மேலாளரான,  தமிழரசன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில்,  ரூ. 25 லட்சம் மதிப்புள்ள செல்போன் டவரை மர்ம கும்பல் திருடிச் சென்றதாக கடந்த 26ஆம் தேதி வாழப்பாடி  காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த நூதன திருட்டில் ஈடுபட்ட கும்பல் குறித்து வாழப்பாடி காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். டவரை திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கிரேன் உள்ளிட்ட வாகனங்கள் குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

டவர் மாயமான பகுதி
டவர் மாயமான பகுதி

வாழப்பாடி அருகே பல லட்சம் மதிப்புள்ள செல்போன் டவர் மாயமானதாக தனியார் நிறுவனம் கொடுத்துள்ள புகார் குறித்து தகவல் பரவியதால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த டவர் திருட்டு கும்பல், உள்ளூர் புள்ளிகள் உதவியுடன், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மட்டுமின்றி தமிழக முழுவதும்  பல்வேறு பகுதியில் இருந்த தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான  ஏராளமான செல்போன் டவர்களை திருடியுள்ளதாக போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இந்த ‌செல்போன் திருட்டு கும்பலைப் பிடித்து உரிய விசாரணை நடத்தினால், தமிழகம் முழுவதும் நடைபெற்ற பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நூதன செல்போன் டவர் திருட்டு குறித்து பல்வேறு சம்பவங்கள் வெளிவரும் என்பதால், இது குறித்து தனிப்படை அமைத்து விரிவான விசாரணை நடத்த வேண்டுமென‌, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு  தனியார் நிறுவனத்தினர் மற்றும்  டவர் அமைக்க  நிலத்தை  குத்தகைக்கு விட்டுள்ள ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com